சமூக தளங்களில் புழுதியை இறைக்காதீர் : பாஜகவினருக்கு மோடி வேண்டுகோள்

வாரணாசி

மூக வலை தளங்களில் தவறாக பதிவதை நிறுத்த வேண்டும் என பாஜக தொண்டர்களுக்கு  மோடி கூறி உள்ளார்..

கட்சித் தொண்டர்கள் தங்கள் கருத்துக்களையும்,  கட்சியின் கொள்கைகளையும் சமூக வலை தளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.    இந்த கருத்துக்களில் சில நேரம் தகாத வார்த்தைகளையும் அவர்கள் பதிவிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.   பொதுவாக மற்றவரை கிண்டல் செய்வதாக வரும் பதிவுகள் பல நேரங்களில் மிகவும் தரக்குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரதமர் மோடி நேற்று தனது தொகுதியான வாரணாசியை சேர்ந்த கட்சி தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார்.  அவர் தனது உரையில், “வீடு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள்.   அது போல கட்சிகளுக்குள் மனக் கசப்பு வந்தால் அது சமூக தளத்தில் பகிர்வது மற்ற ஊடகங்களுக்கு மகிழ்வை தருகிறது.   நான் இதை நமது கட்சி தொண்டர்களுக்கு மட்டும் கூறவில்லை.  அனைத்து மக்களுக்கும் தெரிவிக்கிறேன்.

விமர்சனம் என பலர் தெரிவிக்கும் கருத்துக்கள் தரக்குறைவாக உள்ளன.  அதை அப்படியே பரப்பும் ஊடகவியலர்கள் அதிகம் உள்ளனர்.  இது போல பதிவுகள் பகிரப்படுவதால்  சமூகம் வெகுவாக பாதிக்கப்படுவதை பற்றி அவர்கள் கண்டுக் கொள்வதில்லை.   இதனால் பாஜக தொண்டர்கள் அனைவரும் சமூக தளங்களில் புழுதி வாரி தூற்றுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தூய்மை இந்தியா திட்டம் நாட்டில் மிகவும் புகழடைந்துள்ளது.   ஆனால் மக்களின் மனங்கள் இன்னும் தூய்மை அடையவில்லை என்பது அவ்ரகளுடைய  வலை தள பதிவுகளின் மூலம் தெரிகிறது.   நீங்கள் பதிய நாட்டில் பல நல்ல விஷயங்கள் உள்ளன  அவைகளை பதிவதால் மற்றும் பகிர்வதால் மக்கள் பயனடைவார்கள்.

நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வந்துள்ளது,  அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை கட்டப்பட்டுள்ளன, உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி நாடாக இந்தியா உள்ளது  போன்ர செய்திகளை பதியலாம்.    இது தவிர நாட்டில் பல முக்கிய நிகழ்வுகள்  நடைபெற உள்ளன.  அவை குறித்தும் பகிரலாம்” என தெரிவித்துள்ளார்.