Random image

மோடிக்கு கறுப்புக்கொடி காட்டினால் கொடிக்குத்தான் அவமானம் : சீமான் தாக்கு

“கருப்பு கொடிக்கென்று பெருமை உண்டு.  அதை பிரதமர் மோடிக்கு  எதிராக பயன்படுத்தி சிறுமைப்படுத்த விரும்பவில்லை” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  தெரிவித்திருக்கிறார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இன்று 29 ம் தேதி நாகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.]

நாகை அவுரி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், நடிகர் மன்சூரலிகான் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. .

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான், “தமிழக மக்களின் வரியை மட்டும் மத்திய அரசு பெற்றுக்கொள்கிறது. ஆனால் கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்த நிற்கும் மக்களின் நலனை காக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பிரதமர் மோடி வரவில்லை. ஆனால்  தேர்தல் பிரச்சார வாக்கு வங்கிக்காக தமிழகம் வர இருக்கிறாராம். இது இங்குள்ள மக்களை அவமதிப்பதாகும்.

தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டமாட்டோம். கருப்பு கொடிக்கென்று பெருமை உள்ளது. அதை பிரதமருக்கு எதிராக பயன்படுத்தி சிறுமைப்படுத்த விரும்பவில்லை. அதற்கு பதிலாக பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்காமல் செய்வது தான் நாம் தமிழர் கட்சியின் நோக்கமாகும்” என்று சீமான் தெரிவித்தார்.

தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறுகையில், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கவில்லை என்றால், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக  விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும்” என்றார்.