சிறிய வர்த்தகர்கள் முதுகெலும்பை முறித்த மோடி : ராகுல் காந்தி
அமேதி
பிரதமர் மோடி பெரிய வர்த்தகர்களின் நலனுக்கு சிறிய வர்த்தகர்கள் முதுகெலும்பை முறித்து விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதி உத்திரப் பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியாகும். இங்கு அவர் நேற்றும் இன்றும் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த தொகுதியில் உள்ள பியூர் திங்காய் கிராமத்தில் ஒரு விவசாயி அரசு மையத்தில் தனது விற்பனை பொருட்களை விற்க காத்திருந்தார்.
அவ்வாறு காத்திருந்த சமயத்தில் அந்த விவசாயி மரணம் அடைந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்த விவசாயியின் கிராமத்துக்கு சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். அங்கும் புரத் கஞ்சிலும் அவர் உரையாற்றினார்.
அப்போது ராகுல் காந்தி, “பிரதமர் மோடி பெரிய வர்த்தகர்கள் 15 பேரின் நலனுக்காக ரூ.2 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். இதனால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் முதுகெலும்பை அவர் முறித்துள்ளார். மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் உங்கள் பணத்தை திருடி விஜய் மல்லையாவுக்கும் நிரவ் மோடிக்கும் அளித்துள்ளார்.
அதே போல அவர் கொண்டு வந்துள்ள புல்லட் ரெயில் திட்டம் ஒரு மாய திட்டம் ஆகும். அந்த திட்டத்தை செயல்படுத்துவது உண்மையில் சாத்தியம் அற்றதாகும். டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் பிரச்னை செய்துக்கொண்டிருக்கும் போது சீன பிரதமருடன் மோடி ஊஞ்சாலாடுகிறார். அவருடைய வெளியுறவுக் கொள்கை இதுதானா?” என பேசி உள்ளார்.