ஊர் பெயர்களை மாற்றிய உ.பி. முதல்வர் பெயரை மாற்றிய மோடி…

ஊர் பெயர்களை மாற்றிய உ.பி. முதல்வர் பெயரை மாற்றிய மோடி…

பா.ஜ.க.வை சேர்ந்த உத்தரபிரதேச மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்ய நாத், பதவி ஏற்ற கையோடு அந்த  மாநிலத்தில் உள்ள பல ஊர்களின் பெயரை மாற்றினார்.

பல கோடி மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் புனித விழாவின் நேரலையில், தனது பெயரே ஒரு நாள் மாற்றப்படும் என  யோகி, கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

ஆனால் அது நடந்தே விட்டது.

அயோத்தியில் நேற்று ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி, முக்கிய பிரமுகர்களின் பெயர்களை குறிப்பிட்டு உரையை ஆரம்பித்தார்.

அப்போது மோடி’’ இந்த மேடையில் வீற்றிருக்கும் சக்தி வாய்ந்த , கீர்த்திமிக்க ‘’ ஆதித்ய யோகி நாத் ஜி’’ என அழைக்க-

யோகியும், அரங்கில் திரண்டிருந்த கூட்டமும், நேரலையும் பார்த்த மக்களும் திகைத்து போனார்கள்.

நாக்கு பிசகி, ’’யோகி ஆதித்ய நாத்தை’’, ’’ஆதித்ய யோகிநாத்’’ என உச்சரித்தார், பிரதமர்.

( அப்போது முதல்வர் யோகியின் முகத்தை காட்டாமல் கேமிரா வேறு பக்கம் திரும்பி கொண்டது வேறு விஷயம்)

உப்பு பெறாத இந்த பெயர் உச்சரிப்பு தவறை, சமூக வலைத்தள காரர்கள் உலகம் முழுக்க பரப்பி கிண்டல் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

‘’ மற்றவர்கள் பெயர்களை எல்லாம் நீங்கள் மாற்றினீர்கள். இப்போது உங்கள் பெயரையும் ஒருவர் மாற்றி விட்டார்’’ என ஆரம்பித்து, யோகியை வறுத்தெடுக்க-

சமூக வலைத்தளங்களில் அது வைரலாகி வருகிறது.

-பா.பாரதி.