வரும் 22ம் தேதி மக்களே முன்னின்று நடத்தும் ஊரடங்கு: கொரோனாவை எதிர்கொள்ள பிரதமர் மோடி அழைப்பு

டெல்லி: வரும் ஞாயிறன்று மக்களே முன்னின்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக  நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:  உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக கொரோனா அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம்.

இந்தியா மிக மன தைரியத்துடன் வைரஸ் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் உலகப்போர் போல உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பை இந்தியா உற்று கவனித்து வருகிறது.

உலகத்தையே கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. ஏழை, எளிய மக்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில சமூக இடைவெளி என்பது மிகவும் முக்கியம். பொதுமக்கள் தேவையான பால், உணவு உள்ளிட்ட உணவு பொருட்கள் மக்களுக்கு அரசாங்கம் கிடைக்க செய்யும்.

எனவே, கொரோனா பீதியால் பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம். இந்த நெருக்கடியை இந்தியா நிச்சயமாக வெல்லும். கொரோனா தொற்றுக்கு எதிராக வலிமைமிக்க இந்தியா பீடு நடை போட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

கொரோனா ஒழிப்பு என்பதே நம்முடைய தற்போதைய முன்னுரிமை. எனவே பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். வரும் ஞாயிறன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் எங்கும் செல்ல வேண்டாம், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்.

மக்களுக்காக மக்களே வீட்டுக்குள் இருப்பது நல்லது. வரும் வாரங்களில் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே காத்துக் கொள்வது மிகவும் அவசியம். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்வது நல்லது.