ரஃபேல் ஊழலில் இருந்து மோடி தப்பிக்க முடியாது: ராகுல்காந்தி உறுதி

டில்லி:

ஃபேல் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் நேர்மையாக விசாரணை நடைபெற்றால் பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என அகில இந்திய  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  கூறி உள்ளார்.

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அனில் அம்பானி நிறுவனம் ரூ.10ஆயிரம் கோடி அளவில் பலன் அடைந்திருபபதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஒப்பந்தம் மற்றும்  விலை விபரம் குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இந்த விசயத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் விவரம் தெரிவிக்க மறுத்து வருகிறது.

இந்த நிலையில்,   வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ரபேல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. மத்திய அரசுக்கு விமான ஒப்பந்தம் தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  தலைநகர் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

“ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஊழல் செய்தார் என்பதை நிரூபிக்க உரிய ஆதாரங்கள் உள்ளன. டசால்ட் ஏவியேஷன் நிறுவன தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ள தகவலின்படி, நிலத்துக்காக அந்த தொகை தரப்பட்டதாகவும்,  ஆனால் டசால்ட் நிறுவனம் லஞ்சமாக அளித்த 284 கோடி ரூபாய் தொகையை வைத்துதான் அனில் அம்பானி அந்த நிலத்தை வாங்கியுள்ள தகவல்  தற்போது தெரியவந்துள்ளது என்று கூறினார்.

மேலும்,  நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்திற்கு டசாலட் நிறுவனம் 284 கோடி ரூபாய் தர வேண்டிய அவரசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, இதன்மூலம் டசால்ட் நிறுவன அதிகாரி பொய் கூறுகின்றார் என்பது தெளிவாகி உள்ளது. இந்த ஒப்பந்தமே பிரதமர் நரேந்திர மோடி, அனில் அம்பானி என்ற இரு நபர்களுக்கிடையே செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

ரஃபேல் விமான ஒப்பந்தத்தை  பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு  மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த ராகுல், இந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்திய  பாதுகாப்புத்துறை அமைச்சகம்  தலையிடவில்லை என்றும், இந்த ஒப்பந்தம் குறித்து,  நாடாளுன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டால் முழு உண்மையும் வெளியே வரும். ஆனால், அதை விரும்பாத மத்திய அரசு, சிபிஐ இயக்குனர்களை நீக்கி உள்ளது என்றும் கூறினார்.

ரஃபேல் விவகாரத்தில் விசாரணை நடைபெற்றால் உண்மை எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற அச்சத்தில்  பிரதமர் மோடி இரவு முழுவதும் தூங்காமல் தவித்து வருகிறார் என்றும் கூறினார்.