’’பிரியங்காவைப் பணிய வைக்க முடியாது’’ – மோடிக்குக் காங்கிரஸ் எச்சரிகை

’’பிரியங்காவைப் பணிய வைக்க முடியாது’’ – மோடிக்குக் காங்கிரஸ் எச்சரிகை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ,  அவரது மகன் ராகுல், மகள் பிரியங்கா ஆகியோருக்கு அளித்து வந்த கருப்பு பூனைப்படை பாதுகாப்பை ( எஸ்.பி.ஜி.) மத்திய அரசு கடந்த ஆண்டு வாபஸ் பெற்றது.

தற்போது காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருக்கும் பிரியங்கா, டெல்லியில் லோடி எஸ்டேட்டில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார்.

கருப்பு பூனைப்படை பாதுகாப்பு உள்ளவர்கள் மட்டுமே அரசு பங்களாவில் வசிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, இத்தகைய பாதுகாப்பு இல்லாத பிரியங்கா, டெல்லி அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.

அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,’’ இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

’’காங்கிரஸ் தலைமை மீதான பிரதமர் மோடியின்  பகைமை உணர்ச்சியும்,பழி வாங்கும் நடவடிக்கையும் ஒட்டு மொத்த நாடே அறிந்த விஷயம்- இது போன்ற நோட்டிஸ்களால் காங்கிரஸ் அச்சம் கொள்ளாது- மோடி அரசின் தோல்விகளைத் தொடர்ந்து மக்கள் முன் வைப்போம்.’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

’’காங்கிரஸ் தலைமை மீதான பா.ஜ.க. அரசின் பழி வாங்கும் உணர்ச்சி நன்றாகத் தெரிந்தது என்றாலும் இப்போது, மிகவும் கீழிறங்கி வந்து விட்டது.’’ என்று புகார் தெரிவித்துள்ள சுர்ஜிவாலா,’’ வீட்டை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பி இருப்பதன் மூலம் மோடியும், ( உ.பி. முதல்வர்) யோகி ஆதித்ய நாத்தும் , பிரியங்கா காந்தி மீது அச்சம் கொண்டிருப்பதையே காட்டுகிறது.’’ என்று கூறி உள்ளார்..

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குடும்பத்துக்கு அளித்து வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய அரசு கொஞ்ச காலத்துக்கு முன்பு விலக்கிக்கொண்டதை நாடு அறியும் – முன்னாள் பிரதமர்கள் மன்மோகன்சிங், தேவகவுடா ஆகியோருக்கு அளித்து வந்த . பாதுகாப்பையும்  மோடி எடுத்துக்கொண்டார் ‘’ என்று அவர் தெரிவித்துள்ளார்..

’பிரியங்கா காந்தி, இந்திரா காந்தியின் பேத்தி, அவரையோ  அல்லது காங்கிரஸ் மேலிடத்தையோ இது போன்ற நோட்டிஸ்களால்  பணிய வைக்க முடியாது.’’ என்று எச்சரித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா’’ இந்த நோட்டீஸ்கள் போன்று, எத்தனை  நடவடிக்கைகள் எடுத்தாலும் , உங்கள் அரசின் தோல்விகளை மக்களிடம் கொண்டு செல்வதில் இருந்து எங்களைத் தடுக்க முடியாது’’ என்று  உறுதிபட தெரிவித்துள்ளார்.

-பா.பாரதி.