சென்னை:

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச  இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில்,  அக்டோபர் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை  இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அவ்வப்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழக தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவு துறை அதிகாரிகள், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, தமிழக டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில், தலைவர்கள் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு வசதி மற்றும் செய்ய வேண்டிய  ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பின்போது,  இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.