97 பேரைப் பலி வாங்கிய பாகிஸ்தான் விமான விபத்து : மோடி இரங்கல்

ராச்சி

பாகிஸ்தானில் விமான விபத்தில் மரணமடைந்த 97 பேருக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இன்று பாகிஸ்தான் லாகூரில் இருந்து 97 பேருடன் கராச்சி நகருக்கு விமானம் ஒன்று சென்றது.  அந்த விமானத்தில் 85 பயணிகளும் 12 விமானப் பணிக் குழுவினருமாக 97 பேர் பயணம் செய்துள்ளனர்.   இந்த விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்கும் போது விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி விமானக்  கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அளித்தார்.

விமானம் அவசரமாகத் தரை இறங்கத் தேவையான  ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதனால் அந்தப் பகுதியை சுற்றி வர விமானி முடிவு எடுத்துள்ளார்.  அவ்வாறு சுற்றி வரும் போது கோளாறு அதிகமானதால் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி உள்ளது. விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் இழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்ததால் மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்திய பிரதமர் மோடி தனது டிவிட்டரில், “பாகிஸ்தானில் விமான விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டதற்கு அவர்கள் குடும்பத்துக்கு வருத்தம்  தெரிவிக்கிறேன்.  மேலும் விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன்” எனப் பதிந்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி