கேரள உள்ளாட்சி தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிடும் மோடி..

 

கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அங்குள்ள பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த மலையாளப்புழை பஞ்சாயத்து வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர், ஜிஜோ மோடி. ஆனால் எல்லோரும் மோடி என்று தான் அழைக்கிறார்கள்.

இந்தப்பெயர் அவருக்கு சூட்டப்பட்டது எப்படி?

இவரது குடும்ப பெயர் ‘மோடியில்’ என்பதாகும். இவரின் அப்பாவை பள்ளியில் சேர்க்கும் போது ‘ஜார்ஜ் மோடியில்’ என்று பெயரிட்டு சேர்த்தனர்.

ஆனால் சக மாணவர்கள் ‘ஜார்ஜ் மோடி’ என்றே அழைத்துள்ளனர். இதனால் தனது மகனை பள்ளியில் சேர்க்கும் போது ‘ஜிஜோ மோடி’ என பெயரிட்டுள்ளார், ஜார்ஜ். இவர் காங்கிரஸ் காரர்.

ஆனால் பள்ளியில் படிக்கும் போதே ஜிஜோ மோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாணவர் சங்க உறுப்பினர்.

கொன்னி என்ற இடத்தில் உள்ள கல்லூரியில் பி.காம். படித்த போது, மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பின் சார்பில் போட்டியிட்டு கல்லூரி யூனியன் தலைவர் ஆனார்.

5 ஆண்டுகள் ஊடகம் ஒன்றில் செய்தியாளராக வேலை பார்த்துள்ளார். இப்போது கட்சியின் முழு நேர ஊழியர். எல்லோரும் இவரை மோடி என்று தான் கூப்பிடுகிறார்கள்.

ஒரு முறை கேரள சட்டப்பேரவைக்கு ஜிஜோ மோடி சென்றிருந்தார். அங்கிருந்த ஊழியர்கள் “நீங்கள் பி.எம். ( பிரதமர்) ஆளா ?” என்று கேட்டுள்ளனர்.

இவர் “இல்லை.நான் சி.எம். (முதல்வர் ) ஆள்” என பதில் சொல்லி உள்ளார்.

இந்த பெயரை வைத்துள்ளதால் சங்கடமும் ஏற்பட்டுள்ளது. கட்சி பொதுக்கூட்டத்தில் இவரை மேடையில் வைத்துக்கொண்டே, பிரதமர் மோடியை ‘காம்ரேட்’ கள் வறுத்தெடுத்துப்பதுண்டு.’

“மோடியின் தவறான நிர்வாகம்” “மோடியின் பாசிசம்” என்று அவர்கள் நிந்திக்கும் போது, இந்த மோடியின் முகம் வெளிறிப்போகும். தேர்தலில் “கம்யூனிஸ்ட் கட்சியின்” மோடியை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

– பா. பாரதி