புதுடெல்லி: ஊழல் குறித்து நேருக்குநேர் விவாதம் நடத்த வருமாறு நரேந்திர மோடிக்கு சவால் விட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரஸ்மீட் நடத்தி, பொதுமக்களுக்கு பதிலளிக்க தைரியம் இருக்கிறதா? என்றும் கேட்டுள்ளார்.

நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா? என்ற சவாலை இரண்டாம் முறையாக முன்வைத்துள்ள ராகுல்காந்தி, ABP செய்திச் சேனலுக்கு, பிரதமர் மோடி அளித்துள்ள ஒரு நேர்காணலுடைய 25 விநாடி வீடியோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், நேர்காணல் எடுப்பவரிடம், “ரஃபேல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி, ஃபிரெஞ்சு அரசாங்கம் மற்றும் ஃபிரெஞ்சு அதிபர் ஆகியோர் அளித்த விளக்கங்களையும் நம்புகிறீர்களா?” என்று பிரதமர் கேட்பதாக உள்ளது.

“நீங்கள் தப்பித்து ஓடலாம் திரு.மோடி, ஆனால் ஒளிய முடியாது. உங்களுடைய வினையின் பயன் உங்களையேச் சாரும். உங்களுடைய குரலின் மூலமாகவே நாடு இதைக் கேட்டுக் கொண்டுள்ளது.

உண்மை என்பது அதிக சக்தி வாய்ந்தது. ஊழல் குறித்து என்னிடம் விவாதிக்கத் தயாரா? என்று நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்” என்பதாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

– மதுரை மாயாண்டி