காந்திநகர்:

‘‘ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட விவகாரம், அமித்ஷா மகனின் நிறுவனம் அதிக லாபம் பெற்ற விவகாரத்தில் உண்மை வெளிவருவதை பிரதமர் மோடி விரும்பவில்லை’’ என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

குஜராத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து 2வது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசுகையில், ‘‘ ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட விவகாரம், அமித்ஷா மகனின் நிறுவனம் அதிக லாபம் பெற்ற விவகாரத்தில் உண்மை வெளிவருவதை பிரதமர் மோடி விரும்பவில்லை. இதனால், பார்லிமென்ட் தொடர் கூட்டப்படவில்லை.

ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் பிரான்சில் சிக்கலில் இருந்த போது, அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கோவாவில் மீன்பிடித்து கொண்டிருந்தது பற்றி பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும். நான் தேசப்பற்று மிக்கவன். இதனால், குஜராத்தின் வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சிக்கு அவசியம்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘லட்சக்கணக்கான மக்கள் வேலை இல்லாமல் உள்ளனர். ஆனால், ஒரு நிறுவனத்திற்கு மட்டும் அதிகளவு லாபம் கிடைத்துள்ளது. குஜராத்தில் உள்ள எந்த தொழிலதிபரிடமாவது, ரூ.50 ஆயிரத்தை ரூ.80 கோடியாக மாற்ற முடியுமா என கேட்டால், அனைவரும் ஊழல் செய்யாமல் முடியாது எனக்கூறுவர். ஆனால், இந்தியாவில் ஒரு நிறுவனம் மட்டும் இதை செய்யும். அது ஜெய்ஷாவின் நிறுவனம்.

ஊழல் செய்ய மாட்டேன். ஊழல் செய்ய அனுமதிக்க மாட்டேன் என பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால், தற்போது பேசுவதும் இல்லை. பேச அனுமதிக்கவும் இல்லை என்ற புதிய கொள்கையை வைத்துள்ளார். வருடந்தோறும், நவம்பர் மாதம் பார்லிமென்ட் கூடி விவாதம் நடத்தும். ஆனால், தற்போது குஜராத் தேர்தலுக்கு பின்னர் தான் லோக்சபா, ராஜ்யசபா கதவுகள் திறக்கப்பட உள்ளது. இதற்கு ரபேல் விவகாரம், ஜெய்ஷா நிறுவனம் பற்றி விவாதம் நடத்த பிரதமர் விரும்பவில்லை’’ என்றார்.

இதனிடையே, டுவிட்டரில் ராகுல் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ நரேந்திர பாய் ! பயங்கரவாதத்திற்கு மூளையாக செயல்பட்டவர் சுதந்திரமாக இருக்கிறார், லஷ்கர் அமைப்புக்கு பாகிஸ்தான் ராணுவம் நிதியுதவி செய்யவில்லை என டிரம்ப் சொல்கிறார். கட்டிப்பிடி ராஜதந்திரம் தோல்வியடைந்துள்ளது. இன்னும் நிறைய கட்டிப்பிடிப்புகள் தேவைப்படுகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.