மோடி அரசு ஒப்புக் கொள்ளாத வரை, பொருளாதார மந்த நிலையை சரி செய்ய முடியாது: மன்மோகன் சிங் கருத்து

டெல்லி : பொருளாதார மந்த நிலையை மோடி அரசு ஒப்புக் கொள்ளாத வரை, அதை சரி செய்ய முடியாது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார்.

மான்டேக் சிங் அலுவாலியாவின் “Backstage: The Story behind India’s High Growth Years” என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

முன்னாள் திட்டக்குழு துணை தலைவர் தனது புத்தகத்தில் காங்கிரஸ் அரசின் பலவீனங்கள் குறித்து சிறப்பாக எழுதி உள்ளார். இந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.

ஏனெனில் தற்போதைய மோ அரசானது பொருளாதார மந்த நிலை என்ற வார்த்தைகளை ஏற்க மறுக்கிறது. இது நாட்டுக்குகு நல்லதல்ல. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளாத வரை தீர்வு காண முடியாது.

நீங்கள் சந்திக்கும் பிரச்னைகளை புரிந்து கொள்ளவில்லை என்றால் அதை சரி செய்வதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவோ, நம்பகமான பதில்களை உங்களால் ஒருகாலமும் பெறவே முடியாது. இது தான் உண்மையில் ஆபத்து.

2024-25ம் ஆண்டு க்குள் நாட்டின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களை எட்ட வேண்டும் என்பது போற்றத்தக்க சிந்தனை. அதற்காக 3 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரட்டிபாகும் என்று எதிர்பார்க்க முடியாது.

1990களில் நாட்டின் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் காணப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், ப.சிதம்பரம், அலுவாலியாக ஆகியோரின் முக்கிய பங்களிப்பே காரணம் என்றார்.