புதுடெல்லி:

அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்ற சவுபாக்கியா திட்டத்தின் கீழ் 25 மாநிலங்களில் 100 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


சவுபாக்கியா திட்ட இணையத்தில் அனைத்து மாநில அரசுகளும் சமர்ப்பித்த தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளத விவரம் வருமாறு:

இந்த திட்டத்தின் கீழ் உத்திரப் பிரதேசத்தில் மின் இணைப்பு பெற்ற வீடுகளின் எண்ணிக்கை 1.98 கோடி வீடுகளாக உயர்ந்துள்ளது. தினமும் 60 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு தருவது என திட்டமிடப்பட்டு பணிகள் நடக்கின்றன.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி வரை இன்னும் 40 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு தரவேண்டியுள்ளது. எனினும் இலக்கை எட்டிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

விடுபட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு தரும் வகையில் சவுபாக்கியா ரத யாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பீகார் மாநிலத்தில் 35 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே மின் இணைப்பு இருந்தது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது 1.6 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. பீகாரும் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளது.

ஹரியானா 81.5 சதவீதமும், கர்நாடகா 76.39 சதவீதமும், ஆந்திரா 72.83 சதவீதமும் இலக்கை எட்டியுள்ளன.

ஜார்கண்ட் மாநிலம் மட்டுமே, வீடுகளுக்கான மின் இணைப்பை எவ்வாறு அதிகரித்தோம் என்று விளக்கமாக குறிப்பிட்டுள்ளது. இம்மாநிலத்தில் 15 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு இருந்தது. தற்போது 16 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், முழுமையான தகவல்களை வரும் மே மாதத்துக்குள் தெரிவிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.