நெருப்போடு விளையாடுகிறது மோடி அரசு! காங்கிரஸ் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லி

டில்லி:

காஷ்மீர் விவகாரத்தில் மோடி அரசு எடுத்துள்ள முடிவு நெருப்போடு விளையாடுவதற்கு சமம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

வீரப்ப மொய்லி

கடந்த 1954-ம் ஆண்டு அரசமைப்புச்சட்டம் 370 பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமை அந்தஸ்தை மத்தியஅரசு இன்று ரத்து செய்து அதிரடியாக அறிவித்தது.  சிறப்பு அந்தஸ்துக்கான அரசியல் சட்டப் பிரிவை நீக்குவதற்கு தொடர்பான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா கடும் அமளிகளுக்கு இடையே நடைபெற்ற நீண்ட விவாதத்துக்குப்பின் நிறைவேற்றப்பட்டது.

மத்தியஅரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில்,  காங்கிரஸ் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லி கூறியதாவது,

” மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்களின் அரசியல் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், நாட்டின் கருத்தொற்றுமையின்றி, மாநில அரசுகளுடனும், மக்களிடமும் எந்தவிதமான கருத்தும் கேட்காமல் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 பிரிவை ரத்து செய்துள்ளது.

இது நெருப்போடு மத்திய அரசு விளையாடுவதற்கு சமம். மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பின் மீது விழுந்த தாக்குதல்.  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தான 370 பிரிவை நீக்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டது அறத்துக்கு மாறானது, சட்டவிரோதமானது, அரசமைப்புக்கு எதிரானது. இது காஷ்மீரின் வரலாற்றை திருத்தி எழுத முயற்சிக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார்.