லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் நோக்கில் சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் கை கூட்டணி அமைத்துள்ளன.

 

 

இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் இருவரும் இன்று லக்னோ நகரில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, நாட்டை வரிசையில் நிற்க வைத்தவர்களுக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணி பதில் சொல்லும் என்று தெரிவித்தனர்.

அப்போது, ராகுல்காந்தி பேசியதாவது:

“ அகிலேஷ் சிறந்த நிர்வாகி.   இதற்கு முன்பு கூட நான் அகிலேஷை பாராட்டி இருக்கிறேன். முக்கியமானது என்னவென்றால் அவரை நல்ல முறையில் பணி செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பது தான்.

 

தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியிலும் எனக்கும் அகிலேஷுக்கும் கூட்டணி உண்டு. காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணி

பிரித்தாளும் அரசியலுக்கு முடிவுகட்டும்.  எங்கள் கூட்டணி கங்கா, யமுனா நதிகள் சங்கமித்துள்ளதை போல ஒன்றிணைந்துள்ளது. . இந்த கூட்டணியால் வளர்ச்சி என்னும் சரஸ்வதி வெளியே வருவாள். இது வரலாற்று சிறப்பு மிக்க கூட்டணி. மக்களவை தேர்தலுக்கான கூட்டணி தற்போது விவாதத்திற்கு வந்துள்ளது” என்றார்.

மேலும் அவர், “பிரியங்கா காந்தி எப்பொழுதும் எனக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்து வருகிறார். பிரச்சாரத்திற்கு வரவேண்டுமா வேண்டாமா என்பதை அவரே முடிவு செய்வார்” என்று ராகுல் தெரிவித்தார்.

.அகிலேஷ் யாதவ் பேசுகையில், “சைக்கிளின் இரண்டு சக்கரங்களை போன்றவர்கள் நாங்கள். எங்களுக்கு இடையில் வயதில் கூட அதிக வித்தியாசம் இல்லை. உத்தரபிரதேசத்தை வளமான பாதையில் ராகுலும், நானும் கொண்டு செல்வோம். நாட்டின் அமைதி, வளர்ச்சி, வளம் ஆகியவற்றிற்காகவே கூட்டணி அமைத்துள்ளோம்” என்றார்.