தடை செய்யப்பட்ட தூய்மை இந்தியா வரியை தொடர்ந்து வசூலிக்கும் மோடி அரசு

டில்லி

தூய்மை இந்தியா வரி தடை செய்யப்பட்ட பிறகும் வசூலிக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த 2015 ஆம் வருடம் தூய்மை இந்தியா திட்டத்துக்காக ஒவ்வொரு பொருளுடனும் மற்றும் சேவையுடனும் 0.5% வரி விதிப்பு தொடங்கியது. இந்த வரியின் மூலம் மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீட்டுக் கழிவறைகள், சமூக கழிவறைகள், திட மற்றும் திரவக் கழிவுகள் அகற்றுதல் உள்ளிட்ட பல பணிகளை செய்து வந்தது.

அதன் பிறகு ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் அந்த வரி தடை செய்யப்பட்டு விட்டதாக மாநிலங்கள் அவையில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் சிவ பிரசாத் சுக்லா தெரிவித்தார். இது குறித்து ஒரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டது. இதுவரை மொத்தம் தூய்மை இந்தியா வரியாக வசூலிக்கப்பட்ட தொகை குறித்தும் செலவுகள் குறித்தும் செய்தி ஊடகமான தி ஒயர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தது.

அந்த கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில்,

இதுவரை ரூ. 20600 கோடி தூய்மை இந்தியா வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அதில் 2015-16 ஆம் வருடம் ரூ. 3901.03 கோடி, 2016-17 ஆம் வருடம் ரூ.12306.76 கோடி, 2017-18 ஆம் வருடம் ரூ.4242.07 கோடி மற்றும் 2018 ஆம் வருடம் செப்டம்பர் 30 வரை ரூ.149.40 கோடி வரி வசூலிக்கபட்டுள்ளது”

எனவும்

“தூய்மை இந்தியா வரியின் முலம் கிடைத்த தொகையின் செலவு விவரங்கள் பின் வருமாறு ::
2015-16 = ரூ.2400 கோடி ஒதுக்கீட்டில் ரூ. 2400 கோடி செலவு
2016-17 = ரூ.10500 கோடி ஒதுக்கீட்டில் ரூ.10272 கோடி செலவு
2017-18 = ரூ.3400 கோடி ஒதுக்கீட்டில் ரூ. 3400 கோடி செலவு”

எனவும் விவரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் தூய்மை இந்தியா வரி வசூலிக்க தடை செய்த மோடி அரசு அதே வரியை தொடர்ந்து வசூலித்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் ஒதுக்கீடு மற்றும் செலவு குறித்த பதிலில் செலவு எந்தெந்த இனங்களில் செய்யப்பட்டது என்பதற்கான தகவல் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது