மன்மோகன் சிங் சிறப்பு பாதுகாப்பு நீக்கம் : மோடி அரசின் அடுத்த நடவடிக்கை

டில்லி

முன்னாள் பிரதமரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங் குக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு பிரதமர், முன்னாள் பிரதமர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.   அது மட்டுமின்றி  கொலை மிரட்டல் உள்ள பல தலைவர்களுக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.   இந்த வரிசையில் தற்போது பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவர் மனைவி,  காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி,  ராகுல் காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் முதன்மையானவர்கள் ஆவார்கள்.

கடந்த 1999 ஆம் வருடம் அப்போதைய பாஜகவின் வாஜ்பாய் தலைமையிலான அரசு இந்த பாதுகாப்பில் பல மாறுதல்களை அறிவித்தது.    அதன்படி ஒவ்வொரு வருடமும் இந்த பாதுகாப்பு குறித்து பரிசீலனை செய்யப்படவேண்டும் என மாற்றி அமைக்கப்பட்டதையொட்டி முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், தேவே கவுடா, ஐ கே குஜ்ரால் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

கடந்த 1988 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து இந்த சிறப்பு பாதுகாப்பு அமைக்கப்பட்டது.    வாஜ்பாய் அரசு இந்த விதிமுறைகளை மாற்றிய போதிலும் வாஜ்பாய்க்கு இந்த சிறப்பு பாதுகாப்பு இறுதி வரை அளிக்கப்பட்டு வந்தது.   முந்தைய காங்கிரஸ் அரசு அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை நீக்காமல் இருந்துள்ளது.

தற்போதைய மத்திய பாஜக அரசு இந்த சிறப்பு பாதுகாப்பை  முழுவதுமாக விலக்குவதற்கு பதில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இது குறித்து ஆலோசித்து அதன் பிறகு முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.  இந்த உத்தரவு கடந்த மே மாதம் 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.   இதையொட்டி நேற்று சிறப்பு பாதுகாப்பு குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை நீக்கிக் கொள்ள முடிவு எடுக்கப்பட்டதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.   ஆயினும் செய்து ஊடகங்களில் இது பரபரப்பாகி வருகிறது.   முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், “எந்த ஒரு அரசும் இது போல முன்னாள் பிரதமருக்குச் சிறப்பு  பாதுகாப்பை நீக்கும் முடிவை எடுப்பது தவறாகும்.   முன்பு ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை விபி சிங் விலக்கியதால் ராஜீவ் கொல்லப்பட்டார்.  இதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.