டில்லி

மோடி அரசு இந்துத்வா மற்றும் நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றுக்கக எதுவும் செய்யவில்லை என இந்து அமைப்பான விஸ்வ இந்த் பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா கூறி உள்ளார்.

இந்து அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவின் தொகாடியா.   இந்த அமைப்பு அயோத்தியில்   ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.   இவர் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதி இருந்தார்.    அவர் மோடியுடன் ராமர் கோவில், பொது சிவில் சட்டம் ஆகியவைகள் குறித்து பேச எண்ணி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரவின் தொகாடியா, “ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாக்கு சதவீதம்,  வாக்காளர்கள், வாக்கு இயந்திரம் போதுமானது.   ஆனால் மக்கள் மனதில் இடம் பெறும் தலைவராக இவை மட்டும் போதாது.   சகோதரரே, மேலும் மேலும் உங்களுக்கு அதிகாரம் கிடைப்பதால் இயக்கம் அற்று போய் விடாதீர்கள்.    அது வெறும் மாயை போன்றது.   அதனால் நாட்டுக்கு நலம் சேர்க்க முடியாது”  என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தனது கடிதம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த பிரவீன் தொகாடியா, “நானும் எனது அண்ணன் மோடியும் கடந்த 12 வருடங்களாக சந்தித்துக் கொள்ளவில்லை.  ஆனால் ராமர் கோவிலி கட்டுவது உட்பட பல வாக்குறுதிகளை மோடி அளித்துள்ளதால் அதை நிறைவேற்றுவது குறித்து பேசியாக வேண்டிய நிலையில் இருக்கிறேன்.  அந்த சர்ச்சைக்குறிய நிலத்தில் மசூதி அமைக்கக் கூடாது.   அது பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றினால் மட்டுமே நிறைவேறும்.   தற்போது பாஜக பெரும்பான்மையுடன் இருப்பதால் எளிதாக சட்டம் இயற்ற முடியும்.

அது மட்டுமின்றி பசுவதை தடுப்பு சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும்.  பசு பாதுகாவலர்களுக்கு எதிரான சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.    இதற்கு பொது சிவில் சட்டம் இன்றி அமையாதது.    ஆனால் மோடி அரசு அவற்றை இயற்றாமல் உள்ளது.   இதனால் மோடி அரசு இந்துத்வாவை மட்டுமின்றி நாட்டின் முன்னேற்றத்தையும் கைவிட்டு விட்டது.” என தெரிவித்துள்ளார்.