‘உண்மையை ஒத்துக்கொள்ள மோடி அரசு மறுக்கிறது’ முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

டெல்லி:

நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை குறித்த உண்மையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு  ஏற்க மறுத்து வருவதாக, முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் கூறி உள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின்போது,  திட்டக்குழுத் தலைவராக இருந்த பொருளாதா நிபுணரான  மான்டெக் சிங் அலுவாலியா ’பேக் ஸ்டேஜ்’ (Backstage) என்ற புத்தகத்தை எழுதி உள்ளார் இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா  நேற்று டெல்லியில்  நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மன்மோகன் சிங் உரையாற்றினார்.

அப்போது ”மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து கடுமையான மந்தநிலையில் உள்ளது. இதை மத்திய அரசு உணர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டும். இதில்  உண்மையான ஆபத்து என்னவென்றால், பிரச்னைகளை நாம் அங்கீகரிக்கப்படாவிட்டால், அதற்கான பதில்களைக் கண்டுபிடிப்பதும், சரியான நடவடிக்கை எடுப்பது சாத்தியமில்லை”.ஆனால்,  இந்த உண்மையை ஒத்துக்கொள்ள மோடி அரசு மறுக்கிறது. முதலில் சிக்கலை உணர்ந்து ஒத்துக்கொண்டால்தான் அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க முடியும் என்று அறிவுரை கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  நாட்டிலுள்ள விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கான வழிகள், 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரத்தை ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதற்கான வழிகள் மான்டெக் சிங் அலுவாலியாவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.

இந்த விஷயங்கள் குறித்து நாம் விவாதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.   மேலும், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்தப் புத்தகம் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் வை.வி. ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.