புதுடெல்லி: நாட்டின் நிர்வாகத்தில் திறம்பட கவனம் செலுத்தி, பல துறைகளிலும் சிறப்பான இலக்குகளை திட்டமிட்டு அடையச் செய்யும் வகையிலான பொறுப்புகளை தனது சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு இரண்டாவது முறையாக அளித்துள்ளார் பிரதமர் மோடி.

சிவில் சர்வீஸ் அதிகாரிகள் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறையிலும் நிர்ணயிக்கப்பட வேண்டிய ஐந்தாண்டு திட்டங்கள், தயார் செய்யப்பட வேண்டிய வழிகாட்டு ஆவணங்கள், கால அளவுகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டிலும் செய்துமுடிக்கப்பட வேண்டிய இலக்குகள் ஆகியவற்றை இந்த குழுக்கள் செய்துமுடிக்க வேண்டும். கடந்த 2016ம் ஆண்டும் இத்தகைய குழுக்கள் அமைக்கப்பட்டன.

ஊரகம் மற்றும் வேளாண்மை, உள்கட்டமைப்பு, வளங்கள், சமூகநலம், நிதி, பொருளாதாரம், தொழில்நுட்பம், நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் போன்ற துறைகளில் அந்தக் குழுக்கள் கவனம் செலுத்தும்.

மேலும், அரசு பதவியேற்ற 100 நாட்களுக்குள், ஒவ்வொரு துறையிலும் செய்து முடிக்கவேண்டிய தாக்கம் வாய்ந்த செயல்பாடுகளை கண்டறியுமாறும் அந்தக் குழுவினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுக்களை அமைச்சரவை செயலாளர் மேற்பார்வை செய்து, ஆலோசனைகள் வழங்கி கலந்துரையாடுவார்.