தேசிய குடியுரிமை பதிவேடு குறித்துப் பொய்த் தகவல் அளிக்கும் மோடி அரசு

டில்லி

நாடெங்கும் விரைவில் தேசிய குடியுரிமை பதிவேடு அமலாகும் என அமித்ஷா கூறி உள்ள நிலையில் அந்த திட்டம் ஏற்கனவே வேறு பெயரில் அமலில் உள்ளது தெரிய வந்துள்ளது.

மோடி அரசு சமீபத்தில் அமலாக்கிய குடியுரிமை சட்டத் திருத்தம் கடும் எதிர்ப்பை கிளப்பி வருகிறது.   பல இடங்களில் நடக்கும் போராட்டங்களில் வன்முறை வெடித்ததால்  ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  அதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என அறிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய அரசு இந்தி மற்றும் உருது செய்தித்தாள்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.  அதில் இந்தியக் குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் இஸ்லாமியர்கள் வைத்திருக்க வேண்டிய ஆவணம் குறித்து விரிவாக வெளியிடப்பட்டிருந்தது.   பல தலைமுறைகளாக இந்தியாவில் வசித்து வந்தாலும் இந்த ஆவணங்கள் அவசியம் எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும் நாடெங்கும் தேசிய குடியுரிமை பதிவேட்டில் இடம் பெறாத மக்களுக்குக் குடியுரிமை எப்போதும் கிடைக்காது என்னும் தகவல் பரவியது.   இதை மத்திய அரசு மறுத்தது.  நாடாளுமன்றத்தில் அமித்ஷா இதை மறுத்ததுடன் இதுவரை தேசிய குடியுரிமை பதிவேடு அமல்படுத்தவில்லை எனவும் விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

மத்திய அரசு ஏற்கனவே மக்கள் தொகை பதிவேடு ஒன்றை அமைக்கும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.    இந்த பட்டியலில் அடிப்படையில் யாருடைய குடியுரிமையாவது சந்தேகத்துக்கு இடமாக இருந்தால் அது குறித்து விசாரணை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த பட்டியல் தேசிய குடியுரிமைப் பட்டியலின் இன்னொரு அவதாரம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  மேலும் அவர்கள் மத்திய பாஜக அரசு அறிவித்ததைப் போல் இனி தேசிய குடியுரிமை பதிவேடு அமல் ஆக்க உள்ளதாகச் சொல்வது தவறு எனவும் ஏற்கனவே வேறு பெயரில் அமல் படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.