டில்லி

த்திய அரசை எதிர்த்து உண்ணாவிரத போராட்ட்ம் நடத்த உள்ள அன்னா அசாரே அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

லோக்பால் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தி பல முறை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நிகழ்த்தி உள்ளார். மத்திய அரசு அப்போதெல்லாம் லோக்பால் விரைவில் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து நிறைவேற்றாமல் உள்ளது. அத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் லோக்பால் அமைப்பதாக பாஜக வாக்குறிதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்களவையில் எதிர்கட்சி அந்தஸ்துடன் எந்த கட்சியும் இல்லை என்பதால் லோக்பால் நியமன குழு அமைக்க முடியவில்லை என மோடி அரசு முதலில் தெரிவித்தது. அதன் பிறகு போராட்டங்களுக்குப் பின் அதிக உறுப்பினர் உள்ள கட்சியான காங்கிரஸ் கட்சியை இணைத்து குழு அமைக்கலாம் என அன்னா அசாரே தெரிவித்தார். ஆயினும் லோக்பால் அமைப்பதில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை.

தனது கோரிக்கையை வலியுறுத்தி அன்னா அசாரே மீண்டும் போராட்டத்தை தொடங்க உள்ளார். மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி மாதம் 30 முதல் அன்னா அசாரே தனது சொந்த ஊரான ரலேகான் சித்தியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளார். இது குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அப்போது அன்னா அசாரெ, “கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி அரசு பதவிக்கு வந்தது. அது முதலே நாட்டு மக்களுக்கு ஏதும் நல்லது செய்யும் என நாம் எதிர்பார்த்தோம். தற்போது 5 ஆண்டுகள் ஆக உள்ளன. ஆயினும் மோடி அரசு இது வரை நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை” என அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.