குஜராத் பெட்ரோலியம் நிறுவனத்தை காக்க சட்டத்தை மீற மோடி அரசு முயற்சி : காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி

குஜராத் பெட்ரோலியம் நிறுவனத்தை காக்க ரிசர்வ் வங்கிக்கு எதிராக மோடி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளதாக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

குஜராத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு கடன்கள் அதிகரித்துள்ளன.   பல வங்கிகளில் ரூ. 12519 கோடி கடன் வாங்கி உள்ள இந்த நிறுவனத்தால் அந்த கடனை திரும்ப செலுத்த இயலவில்லை.  எனவே இந்தக் நிறுவனத்தை திவாலானதாக அறிவித்து அதன் சொத்துக்களை வங்கிகள் எடுத்துக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பிக்க ரிசர்வ் வங்கி அலகாபாத் நீதிமன்றத்தை அணுகியது.

ரிசர்வ் வங்கிக்கு  மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இவ்வாறு நிகழ்வது இதுவே முதல் முறை என கருத்து தெரிவிக்கப்படுகிறது.   இது குறித்து காங்கிரஸ் கட்சி பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ்  தனது நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ், “குஜராத் பெட்ரோலியம் நிறுவனம் குறித்து ஒரு அரசு சாதகமான அறிக்கையை ரிசர்வ் வங்கிக்கு எதிராக அளித்தது இதுவரை நிகழாத ஒன்றாகும்.   ஏற்கனவே அரசு ரூ.20000 கோடி நிதியை அந்த நிறுவனத்துக்கு அளித்தும் உற்பத்தி சீராகவில்லை.    அந்நிறுவனத்துக்கு  மேலும் மேலும் கடன்கள் அதிகரித்து வருகின்றன.   தற்போது கடன் ரூ.12519 கோடியை தாண்டி விட்டது.  ஆயினும் அரசு இது குறித்து நீதிமன்றத்தை அணுகவில்லை.   அதற்கு பதிலாக ரிசர்வ் வங்கிக்கு எதிராக அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்துள்ளது.

எனவே இந்த நிறுவனத்தை உடனடியாக திவாலானதாக அறிவிக்க வேண்டும்.  இந்த நிறுவனத்தின்சொத்துக்களை விற்று வங்கிகளின் கடனை திரும்ப பெற  மத்திய அரசு உதவ வேண்டும்.    அரசின் இந்த ரிசர்வ் வங்கிக்கு எதிரான அறிக்கை மிகவும் தவறானது.   இந்த அறிக்கை ரிசர்வ் வங்கிக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு சமமானது” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.