பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தாரை வார்க்கும் மும்முரத்தில் மத்திய அரசு!

புதுடெல்லி: மத்திய அரசின் எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில், தன்வசமுள்ள பங்குகள் அனைத்தையும் தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது மத்திய அரசு.

தற்போதைய நிலையில், அந்நிறுவனத்தின் 52.98% பங்குகள் மத்திய அரசிடம் உள்ளன. எனவே, இந்தப் பங்குகள் அனைத்தையுமே விற்பனை செய்யும் முடிவை மேற்கொண்டுள்ளது மத்திய அரசு.

இதனையடுத்து, இந்தப் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவிப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய அரசு வரவேற்றுள்ளது.

பங்குகளை வாங்கும் ஆர்வமுள்ளவர்கள், வருகின்ற மே மாதம் 2ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை முதலீடு மற்றும் பொதுச் சொத்துக்கள் நிர்வாகத் துறையிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பங்குகளுடன் சேர்த்து நிர்வாகக் கட்டுப்பாடும் வழங்கப்படவுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள எந்த ஒரு தனியார் நிறுவனமும் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம்.

நிறுவனங்களின் கூட்டமைப்புகளும் ஏலத்தில் பங்கேற்கலாம். ஆனால், நான்குக்கு மேற்பட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்த ஏலத்தில் பங்கேற்க இயலாது.

பாரத் பெட்ரோலியத்தின் சந்தை மதிப்பு ரூ.87 ஆயிரத்து 388 கோடி. இதில், மத்திய அரசின் வசம் இருக்கும் பங்கு மதிப்பு, தற்போதைய விலையில் ரூ.46 ஆயிரம் கோடி. இந்நிறுவனத்திடம் 15 ஆயிரத்து 177 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. மேலும், 6,011 எல்பிஜி வினியோக ஏஜென்சிகளும் உள்ளன. நாட்டின் மொத்த பெட்ரோலியப் பொருட்கள் நுகர்வில் 21% ஐ பாரத் பெட்ரோலியம் வினியோகித்து வருகிறது. பாரத் பெட்ரோலியம் 4 சுத்திகரிப்பு நிலையங்களையும் இயக்கி வருகிறது.