நீரவ் மோடியை பிடித்து வருவதற்கான நடவடிக்கைகள் பொய்யானவையா?

புதுடெல்லி: வங்கி மோசடியில் ஈடுபட்டு நாட்டைவிட்டு தப்பி ஓடிய நீரவ் மோடியை, திரும்ப இந்தியாவிற்கு கொண்டுவர, மத்திய அரசு சார்பில் ஆர்வம் காட்டப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி பெருந்தொகையை மோசடி செய்துவிட்டு, பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுவிட்ட நீரவ் மோடியை, பிடிப்பதற்கான அனைத்துவித நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய அரசு சார்பில் சொல்லப்பட்டு வந்தது.

ஆனால், பிரிட்டன் தரப்பில் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருந்தும், இந்திய அரசு சார்பில், அவ்விஷயத்தில் எவ்வித ஆர்வமும் காட்டப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் இப்போது வெளிவந்துள்ளது.

பிரிட்டன் அதிகாரிகள் தரப்பில், இதுதொடர்பாக இந்திய அரசுக்கு 3 முறை கடிதங்கள் எழுதப்பட்டும், மத்திய அரசு சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லையாம்.

மேலும், இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கவும், பிரிட்டனிலேயே நீரவ் மோடியை ‍கைதுசெய்வதற்கு தேவையான ஆவணங்களை பெற்றுக்கொள்ளவும், பிரிட்டன் அதிகாரிகள் குழு, இந்தியாவிற்கு வருவதற்கு ஆர்வம் தெரிவித்தும், மத்திய அரசு சார்பில் பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றே தகவல்கள் கூறுகின்றன.

மக்களின் வரிப்பணத்திலிருந்து மிகப்பெரிய தொகையை மோசடி செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுப்பதில், மத்திய அரசு இந்தளவு மெத்தனமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

– மதுரை மாயாண்டி