இறக்குமதி செய்த வெங்காயத்தை வங்கதேசத்துக்கு விற்பனை செய்ய உள்ள மோடி அரசு

டில்லி

றக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை மாநிலங்கள் வாங்கிக் கொள்ளாததால் அதை வங்கதேசத்துக்குக் குறைந்த விலையில் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பல மாநிலங்களில் வெங்காயப் பயிர் பாழானது.   அதையொட்டி வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் விலை கட்டுக்கு அடங்காமல் உயர்ந்தது.   இதையொட்டி மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யத்  திட்டமிட்டது.

ஒவ்வொரு மாநிலங்களின் தேவைகளைக் கணக்கிட்டு வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு 36000 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய உத்தேசித்து அதில் 18000 டன் வெங்காயம் ஏற்கான்வே இந்தியத் துறைமுகங்களை வந்தடைந்தது.   ஆனால் தற்போது இந்த வெங்காயங்களை மாநில அரசுகள் வாங்க முன் வரவில்லை.  இதுவரை சுமார் 3000 டன் வெங்காயம் மட்டுமே விற்பனை ஆகி உள்ளன.

இது குறித்துப் பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர், “பல மாநிலங்கள் தற்போது வெளிநாட்டு வெங்காயம் வேண்டாம் எனக் கூறியதால் ஏராளமான இறக்குமதி வெங்காயம் இருப்பில் உள்ளது.  இவை அதிக நாட்கள் வைத்திருந்தால் அழுகி பாழாகும் என்பதால் அரசு இவற்றை வங்கதேசத்துக்கு விற்பனை செய்ய முடிவு செய்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இந்த வெங்காயம் ஒரு டன் 600 முதல் 800 டாலர் என்னும் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.   தற்போது இவற்றை டன்னுக்கு 550-580 டாலர் விலைக்கு அளிக்க மத்திய அரசு முன் வந்துள்ளது.   ஆனால் வங்க தேசம்  ஏற்கனவே நேபாளம் மூலமாகச் சீன வெங்காயத்தை வாங்கி வருவதால் இந்தியாவிடம் மேலும் விலையைக் குறைக்கப் பேரம் செய்து வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.