டில்லி

மோடி அரசு திவால் சட்டத்தை நீர்த்துப் போக வைக்க தனக்கு அழுத்தம் அளித்ததாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தாம் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகப் பதவி விலகினார்.  அதைத் தொடர்ந்து உர்ஜித் படேல் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.   இவர் பிரதமருக்கு வேண்டியவர் என்பதால் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறின.  ஆனால் அவருக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.   அதையொட்டி உர்ஜ்த் படேல் ராஜினாமா செய்தார்.

உர்ஜித் படேல் சமீபத்தில் ஓவர் டிராஃப்ட்ஸ் சேவிங் தி இந்தியன் சேவர் என்னும் பெயரில் ஒரு நூல் எழுதி உள்ளார்.  இந்த நூலில் அவர் தாம் வங்கி முறையைச் சீர் செய்ய முயன்றதற்கு மத்திய அரசு எதிர்த்ததாகவும் வங்கியில் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாதோர் மீது நடவடிக்கை எடுப்பதைப் பிரதமர் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த புத்தகத்தில் உர்ஜித் படேல்   , “திவால் சட்டத்தை நீர்த்துப் போகும்படி செய்ய எனக்கு அழுத்தம் அளித்தது.,  இதனால் எனக்கும் மத்திய அரசுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதற்கு நான் ஒப்புக் கொள்ளாததால் பதவி விலக நேர்ந்தது” என குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரல் ஆசார்யா குறிப்பிட்டிருந்தார்

இது கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.  இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.  இதற்கு பதில் அளித்த பாஜக ராகுல் காந்தி மீது தனிமனித தாக்குதலை நடத்தி உள்ளது. இது மேலும் சர்ச்சையை அதிகரித்து  உள்ளது.