டில்லி

காந்தியின் நினைவு இல்லமான  காந்தி ஸ்மிரிதியில் பல புகைப்படங்களை மோடி அரசு நீக்கி உள்ளதாகக் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிர்லா மாளிகை அவர் மரணத்துக்குப் பிறகு காந்தி ஸ்மிரிதி என பெயர் மாற்றப்பட்டு காந்தி நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.   அங்கு காந்தியின் வாழ்க்கை தொடர்பான பல பொருட்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.   அங்கு பலரும் சென்று காந்திக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கமாகும்.

இங்கு சமீபத்தில் சென்ற காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தெரிவித்ததாவது :

“நான் கடந்த வியாழன் அன்று டில்லியில் உள்ள மகாத்மா காந்தி கொல்லப்பட்ட இடமான காந்தி ஸ்மிரிதிக்கு மரியாதை செலுத்தச் சென்றிருந்தேன்.  பிர்லா மாளிகை என முன்பு பெயரிடப்பட்டிருந்த அந்த நினைவிடத்தில் காந்தி கொலை, மற்றும் இறுதிச் சடங்குகளின் பெரிதாக்கப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும். அந்த புகைப்படங்கள் பிரஞ்சு புகைப்படக் கலைஞரான ஹென்றி கார்ட்டியர் பிரசன் எடுத்து இந்த நினைவிடத்துக்குப் பரிசளித்த படங்கள் ஆகும்.

ஆனால் தற்போது அந்த புகைப்படங்கள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் தொலைக்காட்சி பெட்டி பொருத்தப்பட்டு காந்தியின் புகைப்படங்கள் ஒளிபரப்பப் படுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.   காந்தியின் கொலை புகைப்படங்களுக்குப் பதில் செயற்கையாக உருவாக்கப்பட்ட படங்கள் இருந்ததைக் கண்டு நான் கோபம் அடைந்தேன்.  பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் இங்கு வந்த பிறகு அவருடைய யோசனையின் பெயரில் இந்த மாற்றம் அடைந்துள்ளதாக அறிந்தேன்.  இது குறித்து நான் எனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தேன்.

பலமுறை இந்த இடத்தில் மாறுதல்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் இங்கு நடந்த பல நிகழ்வுகள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த மாறுதல் முதல் முறை 1948 ஆம் வருடம் ஜனவரி 20 ஆம் தேதி காந்தியைக் கொல்ல முயற்சி நடந்ததில் இருந்து நிகழ்ந்தது. அப்போது நடந்த குண்டு வெடிப்பில் இந்த மாளிகையில் ஒரு பகுதி சேதம் அடைந்தது.    அப்போது அது பிர்லா குடும்பத்தினருக்குச் சொந்தமானதாக இருந்ததால் அதை அவர்கள் பழுதுபார்த்ஹ்டன்ர்.  ஆனால் அதன் பிறகு  இந்திய அரசால் வாங்கப்பட்டு நினைவிடமாகிய பிறகும் பல முறை தேவை இல்லாமல் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.  இப்போது அங்கு வருபவர்களால் அந்த குண்டு வெடிப்பு குறித்து எதுவும் தெரிந்துக் கொள்ள இயலாத நிலை உள்ளது.

காந்தியின் கொலை நடந்த போது கார்டியர் ப்ரெசன் எடுத்த புகைப்படங்கள் மிகவும் துல்லியமாக இருந்ததால் அதை அவரே பெரிது படுத்தி நினைவகத்துக்கு அளித்திருந்தார்.     இந்த புகைப்படங்கள் காந்தியின் கொலையின் போது நடந்த அனைத்து சரித்திர நிகழ்வுகளையும் மக்களுக்கு தெரிவித்து வந்தன.

இதில் ஒரு படத்தில் காந்தியின் உடல் அவர் மீது தூவப்பட்ட ரோஜா இதழ்கள் மற்றும் அவருடைய மார்பில் உள்ள மூன்று துப்பாக்கிக் குண்டுக் காயங்களுடன் இருந்தது.   காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி இந்த காயங்கள் காந்திக்கு அவருடைய அகிம்சைக்காக அளிக்கப்பட்ட பதக்கங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.  அத்துடன் அவருடைய உடல் மாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து பலர் காண வசதியாக வைக்கப்பட்டிருந்த புகைப்படமும் இருந்தது.

அத்துடன் காந்தியின் கைக்கடியாரம் அவர் கொல்லப்பட்ட நேரத்தில் அதாவது 5.17க்கு நின்று போன புகைப்படமும் அங்கு இருந்தது.  அத்துடன் அவருடைய இரத்தக்கறை படிந்த உடைகள், டில்லி தெருக்களில் சென்ற அவருடைய இறுதி ஊர்வலம்,  அங்குக் கூடியிருந்த மக்கள், இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்ட மக்களின் துயர முகங்கள்,  சிதையின் அருகில் அமர்ந்திருந்த நேரு மற்றும் அமைச்சர்கள், மவுண்ட் பேட்டன் குடும்பத்தினர், உள்ளிட்ட பல புகைப்படங்கள் இருந்தன.  அத்துடன் காந்தியின் உடல் எரியூட்டும் போது நேருவின் தலைமையில் நடந்த இரங்கல் கூட்டத்தின் புகைப்படங்களும் அங்கு இருந்தன.

இந்த புகைப்படங்களை அகற்றுவதென்பது காந்தியின் கொலை நிகழ்வின் நீர்த்துப் போகச் செய்து சான்றுகளை அழிக்கும் செயல் எனவே எனக்குத் தோன்றுவதால் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை.    காந்தியின் கொலை விவரங்களை மறைக்க உச்சநீதிமன்றத்தில்  மறு விசாரணைக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  விரைவில் அது தற்கொலை எனவும் இந்த அரசு தெரிவிக்கலாம்.   அதற்காகவே ஒரு குஜராத் பள்ளியில் காந்தி எவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டார் என கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

மோடி அரசு மற்றும் காந்தி ஸ்மிரிதி இயக்குநர் திபங்கர் ஸ்ரீ ஞான் ஆகியோர் இந்த புகைப்படங்களை அகற்றியது டிஜிட்டல் மயமாக்கத்தின் ஒரு பகுதி எனத் தெரிவிக்கின்றனர்.  இது அநியாயமான விளக்கம்.  இவர்கள் சரித்திரத்தை மாற்ற நினைப்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

காந்தி குறித்த வரலாற்று ஆவணங்கள் மீண்டும் காந்தி ஸ்மிரிதியில் இடம் பெற வேண்டும்.  இந்த டிஜிட்டல் முறையால் காந்தியின் கொலை குறித்த உண்மைகள் மறைக்கப்படுவதால் அதை நீக்கி விட வேண்டும்.  காந்தி ஸ்மிரிதி என்பது எளிமையே தனது மதம் என வாழ்ந்தவரின் நினைவு இல்லம்.  எனவே இங்கு எவ்வித டிஜிட்டல் ஆடம்பரமும் தேவை இல்லை.  எனவே எளிமையான புகைப்படங்களே போதுமானது”

என துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.