விளம்பர அரசாக மாறிய பாஜக அரசு…! ஒரே ஆண்டில் விளம்பரங்களுக்கு ரூ. 713 கோடி செலவு

டெல்லி: விளம்பரத்துக்காக மத்தியில் ஆளும் பாஜக 2019-20ம் ஆண்டில் 713 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளி வந்துள்ளது.

இது தொடர்பாக ஜதின் தேசாய் என்பவர் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் 2019  – 2020ம் ஆண்டில் பாஜக அரசு விளம்பரத்துக்காக எத்தனை கோடி ரூபாய் செலவிட்டது என்று ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பினார். அதற்கு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

அதன்படி, நடப்பாண்டில் 713.20 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளதாகவும், கணக்கு படி நாள் ஒன்றுக்கு 1.95 கோடி என்றும் பதில் கூறி உள்ளது. அச்சு ஊடகங்களுக்கு 295.05 கோடி, மின்னணு ஊடக விளம்பரங்களுக்கு 317.05 கோடி, சுவரொட்டி, பதாகை ஆகியவற்றுக்கு 101.10 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த அனில் கல்கலி என்பவரின் மற்றொரு தகவல் அறியும் கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சகம், 2019ல் அச்சுப்பொறி, மின்னணு, ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களில் விளம்பரம் ஆகியவற்றிற்காக ரூ .3,767 கோடியை செலவிட்டதாக தெரிவித்துள்ளது.

2018ம் ஆண்டு மே மாதத்தில் கல்காலி எழுப்பிய ஆர்டிஐ கேள்விக்கு 2014ம் ஆண்டு பாஜக அரியணை ஏறியதில் இருந்து விளம்பரத்துக்காக இதுவரை 4, 343.26 கோடியை செலவிட்டதாக கூறி உள்ளது.