டில்லி:

திருமணத்திற்கு முன்பு பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு ரூ. 51 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் பரிந்துரைக்கு மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

பெண்கள் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் ‘‘சாதி சாகுன்’’ என்ற இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மவுலானா ஆசாத் அறக்கட்டளை மூலம் நிதியுதவி பெறும் அனைத்து மாணவிகளும் இதை பெற தகுதியுள்ளவர்கள். இந்த திட்ட அறிக்கை மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் முக்தர் நக்வி முன்னிலையில் கடந்த ஜூலை மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.

இது குறித்து மவுலானா அறக்கட்டளை பொருளாளர் ஹூசைன் அன்சாரி கூறுகையில், ‘‘முஸ்லிம் பெண்கள் மற்றும் இதர சிறுபான்மை பிரிவினர் தங்களது மகள்களை உயர்கல்வி பயில வைப்பதா? அல்லது திருமணம் செய்துவைப்பதா? என்ற குழப்ப மன நிலையில் இருக்கின்றனர். சிறுபான்மை பிரிவினர் தங்களது மகள் கல்விக்கு செலவு செய்வதை விட திருமணத்திற்கு பணம் சேமிப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர்’’ என்றார்.

ஏற்கனவே முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்த மதம், பார்சிஸ், ஜெயின்ஸ் ஆகிய 6 சிறுபான்மை பிரிவினருக்கு பேகம் ஹஸ்ரத் மகால் உதவித் திட்டம் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதோடு சேர்த்து தற்போது கூடுதலாக இந்த உதவித் தொகையும் வழங்கப்படவுள்ளது. பெற்றோர் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டினால் இந்த உதவித் தொகை பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.