புதுடெல்லி: தற்போதைய நாடாளுமன்ற கட்டடம், மத்திய அமைச்சக அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை புனரமைப்பு செய்யும் அல்லது புதிதாக கட்டும் ஒரு பெரிய திட்டத்தை நரேந்திர மோடி அரசாங்கம் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்தப் புதிய திட்டத்தில், ஜனாதிபதி மாளிகையின் தொடக்கம் முதல் இந்தியா கேட் வரையிலான 4 சதுர கிலோமீட்டர் வரையிலான பகுதிகள் அடங்கும். இந்த கட்டடங்கள் எட்வின் லுட்யன்ஸ் என்ற பிரிட்டிஷ்காரரால் வடிவமைக்கப்பட்டவை.

இந்த புதிய மெகா திட்டத்தின்படி, தற்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டடத்தின் அருகிலேயே ஒரு புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்டுதல் அல்லது இருக்கும் கட்டடத்தை நவீனப்படுத்தல், கிட்டத்தட்ட பெரும்பாலான துறைகளை உள்ளடக்கும் வகையில் ஒரு பொதுவான மத்திய செயலகத்தைக் கட்டுதல் மற்றும் அந்த இடத்தை ஒரு கவர்ந்திழுக்கும் சுற்றுலா தளமாக மாற்றுதல் உள்ளிட்டவை நோக்கங்களாக உள்ளன.

இதற்கான திட்டத்தை வரைவுசெய்து அளிக்குமாறு, பல நிறுவனங்களை மத்திய பொதுப்பணித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. நல்ல நிர்வாகம், திறமை, வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, பங்கீடு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்தக் கட்டுமானம் அமைய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் தொகுதி மறுவரையரையின்படி தேர்வாகும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போதைய கட்டடம் போதுமானதாக இருக்காது. இந்தக் கட்டுமானம் தொடங்கப்பட்டால் அதை வரும் 2024ம் ஆண்டிற்குள் அனைத்தையும் முடிப்பதற்கு திட்டமிடப்படுகிறது என்று அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.