புதுடெல்லி: கொரோனா தொற்றியோர் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் மரணங்களும் இந்தியாவில் எகிறி வரும் நிலையில், நரேந்திர மோடி அரசு, கொரோனா விஷயத்தில் காட்டும் அலட்சியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு அத்தாட்சியாக பல விஷயங்கள் உதாரணம் காட்டப்படுகின்றன. மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் கடைசியாக ஜூன் 11ம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதற்கு முன்பாக, ஜூன் 9ம் தேதி ஆய்வுக்கூட்டம் அவரின் தலைமையில் நடைபெற்றது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கொரோனா தொடர்பான பணிக்குழு, கடைசியாக 2 வாரங்களுக்கு முன்னால் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் டெல்லியில் உச்சம் பெற்றுள்ள கொரோனா பாதிப்பைக் களைவதை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது நேரடி பொறுப்பில் எடுத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், மோடி அரசின் இதர உறுப்பு அமைப்புகள், கொரோனா பரவல் விஷயத்தில் அலட்சியம் காட்டுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில், தற்போதைய நிலையில், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்‍கை 4,56,183 மற்றும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 15,968. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 312 பேர் இறந்துள்ளனர்.