புதுடெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

தேர்தலில் தற்போது தோல்வியடைந்துள்ள டிரம்ப்பிற்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர் மோடி. எனவேதான், ‍’ஜோ பைடன் வென்றால், மோடிக்கு நல்லதல்ல; ஆனால் இந்தியாவுக்கு நல்லது’ என்றெல்லாம் கூறப்பட்டது.

இந்நிலையில், தேர்தலில் வென்ற இருவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார் மோடி. தனது டிவிட்டர் செய்தியில்,

“உங்களின் சிறப்பான வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஜோ பைடன்! நீங்கள் துணை அதிபராக பதவி வகித்தபோது, இந்திய – அமெரிக்க உறவை வலுப்படுத்துவதற்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது மற்றும் மதிப்பற்றது. இந்நிலையில், இந்திய – அமெரிக்க உறவை, புதிய உயரங்களுக்கு இட்டுச்செல்ல மீண்டுமொருமுறை உங்களுடன் இணைந்து செயலாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்” என்றுள்ளார் மோடி.

கமலா ஹாரிஸுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

“கமலா ஹாரிஸுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்! உங்களது வெற்றி மகத்தானது, மற்றும் உங்கள் உறவினர்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கும் மட்டற்ற பெருமையை தரக்கூடியது. உங்களின் ஆதரவு மற்றும் தலைமையின் உதவியுடன், துடிப்புமிகு இந்திய – அமெரிக்க உறவு இன்னும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன்” என்றுள்ளார் மோடி.