மோடியின் ஆட்சியில் முதல்வர்களுக்கு மரியாதை இல்லை: புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி:

மோடி தலைமையிலான பாரதியஜனதா ஆட்சியில் மாநில முதல்வர்களுக்கு  மரியாதை இல்லை என்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசுக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி வழங்கி உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, சிறப்பு மத்தியஅரசு மேகதாது அணை கட்ட வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக புதுச்சேரிசட்டமன்றத்தில் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதல்வர் நாராயணசாமி,  காவிரி பிரச்சினை தொடர்பாக உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள  தீர்ப்பில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீரில் விகிதாசார அடிப்படையில் 7 டி.எம்.சி., தண்ணீரை புதுவைக்கு வழங்க வேண்டும் என கூறி உள்ளது. ஆனால்,  கர்நாடகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் அதுபற்றி கவலைப்படுவதில்லை.

ஆனால், புதுவை மாநில விவசாயிகள் நலனை காப்பது அரசின் கடமை. விவசாயிகள் நலனுக்காக போராட வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டு மென்றால் சம்பந்தமாக மாநிலங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று உச்சநீதீமன்றம் ஏற்கனவே  தெரிவித்து உள்ளது. ஆனால், தீர்ப்பை மீறி,  ஒருதலைபட்சமாக கர்நாடக அரசு முடிவு எடுத்துள்ளது.

இதுதொடர்பாக,  காவிரி நீர்வள ஆணையம், காவிரி மேலாண்மை ஆணையம் இரண்டிற்கும் தனித்தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசை எதிர்த்து, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு புதுவை அரசு சார்பில் விரைவில் தொடுக்கப்படும் என்றார்.

மேலும்,  மாநிலத்தில் எந்த ஆட்சி நடப்பது என்பது முக்கியமல்ல. மாநில மக்கள் நலன்தான் முக்கியம். ஆனால் புதுவையில் உள்ள பாரததிய ஜனதாவினர் மாநில வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைபோட டில்லி செல்கின்றனர்.

ஆனால், ஒரு மாநில முதல்வர், பிரதமரை சந்திக்க பலமுறை அனுமதி கேட்டும் நேரம் ஒதுக்கி கொடுப்பதில்லை. நான் பிரதமரின் இணை அமைச்சராக இருந்திருக்கிறேன். பல பிரதமர்களை பார்த்திருக்கிறேன். ஆனால், மாநில முதல்வர்களுக்கு மரியாதை இல்லாது போனது தற்போதைய பா.ஜனதா ஆட்சியில் தான் நடக்கிறது.

பிரதமர் எதுவும் செய்ய வேண்டாம், ஆனால் அவர்கள் கூறுவதையாவது காது கொடுத்து கேட்க வேண்டும்… ஆனால் பிரதமர்  பாதிநேரம் வெளிநாட்டிலேயே இருந்தால் நாடு என்ன ஆவது.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

#Narayanasamy #BJP