டில்லி:

நாட்டின் மிக உயர்ந்த புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு இயக்குனர் இல்லாத நிலையில், புதிய இயக்குனர்  தேர்வு இன்று நடைபெறுகிறது. 3 பேரை கொண்டு தேர்வு குழுவினர் இன்று மாலை கூடி புதிய இயக்குனரை தேர்ந்து எடுக்க உள்ளார்கள்.

சிபிஐ இயக்குனர் தேர்வு குழுவில் பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர்  உள்ளனர். இவர்கள் புதிய இயக்குனர் குறித்துதேர்வு செய்து அறிவிக்க  உள்ளனர்.

சிபிஐக்கு இயக்குனர்களுக்கு இடையே ஏற்பட்ட சர்ச்சை காரணமாக முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, முன்னாள் சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானா  ஆகிய இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதை எதிர்த்து அலோக் வர்மா தொடர்ந்த வழக்கில்,  உச்ச நீதிமன்றம் சிபிஐ இயக்குநராக மீண்டும் அலோக் வர்மாவை  நியமித்தது.  மேலும் தேர்வுக் குழு கூடி இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான உயர்மட்ட தேர்வுகுழுகூடி  அலோக் வர்மாவை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கி, தீயணைப்பு துறைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, தற்காலிக சிபிஐ இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று சிபிஐ இயக்குனர் தேர்வு குழு கூடி புதிய இயக்குனரை தேர்வு செய்கிறது.‘

சிபிஐ இயக்குனர் பொறுப்புக்கு ஜே.கே. சர்மா மற்றும் பரமிந்தர் ராய் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.