சென்னை,

தினத்தந்தி நாளிதழின் 75-ம் ஆண்டு பவள விழா, மற்றும் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் சோமநாதன் என்பவரின் மகள் திருமண விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் மற்றும் துணைமுதல்வருடன் ஆலோசனை நடத்தினார்.

தினத்தந்தியின் பவளவிழா இன்று காலை 11.30 மணி அளவில்  சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள சென்னை வந்துள்ளார்.

இதற்காக காலை 9.25 மணி அளவில்  சென்னை விமானம் வந்த மோடிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி., எச்.ராஜா, தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம்  அடையாறு கடற்படை தளத்திற்கு சென்றார்.  அங்கு அவருடன்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன் தமிழக மழை பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, தமிழக கவர்னர்  பன்வாரிலால் புரோஹித், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

அதைத்தொடர்ந்து  தினத்தந்தி பவள விழா நடைபெறும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டார். அவருடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர், ஆளுநர் ஆகியோரும் உடன் புறப்பட்டனர்.