Random image

பங்களாதேஷிற்கு எரிபொருள் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணி…மோடி தொடங்கி வைத்தார்

டில்லி:

பங்களாதேஷிற்கு எரிபொருள் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணியை மோடி தொடங்கிவைத்தார்.

பங்களாதேஷ்க்கு டீசல், மற்றும் இயற்கை எரிவாயு எடுத்துச் செல்ல குழாய்களை இந்தியா அமைக்க உள்ளது.அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு இந்தியா வந்தபோது 15 ஆண்டுகளுக்கு டீசல் வழங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. முதலில் ரெயில்கள் மூலம் டீசல் பங்களாதேஷிற்கு கொண்டு செல்லப்படும். பின்னர் குழாய்கள் அமைக்கப்பட்டு அவற்றின் வழியாக டீசல் அனுப்பப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து பர்பத்திப்பூர் வரையில் 131 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் குழாய் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகளை பிரதமர் மோடியும் ஷேக் ஹசினாவும் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தனர்.டாக்காவில் இருந்து டோங்கி வரையிலும், டோங்கியில் இருந்து ஜாய்தேவ்பூர் வரையிலுமான இரட்டை வழித்தட ரெயில் பாதகளை அமைக்கும் பணிகளையும் அவர்கள் தொடங்கி வைத்தனர்.

டில்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இந்த தொடக்க நிகழ்ச்சியில் காணொலி மூலம் கலந்து கொண்டனர். டாக்காவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷேக் ஹசீனா நேற்று பிறந்தநாள் கொண்டாடிய மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

புகைப்படம் உதவி ஏஎன்ஐ: நன்றி