துபாய்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூலம் பிரதமர் மோடி இஸ்லாமியருக்கு எதிராக அரசியல் செய்து வாக்கு வேட்டை ஆடுவதாக அரபு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது.  இதைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவித்தது.   ஆயினும் கொரோனா தொற்று அதிகரித்ததால் ஊரடங்கு மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  தாக்கம் மேலும் அதிகரிப்பதால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படக் கூடும் என அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன.

அரபு செய்தி ஊடகமான கல்ஃப் நியூஸ் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில்,

“உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளும் மார்ச் முதல் கோரோனாவுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றன.   இத்தகைய வெளிநாட்டு அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட நிலையிலும் இந்தியா இன வேற்றுமை என்னும் வைரஸை நாட்டுக்குள் பரப்ப தொடங்கியது.

முதலில் கோரோனா தாக்குதலுக்குச் சீனாவைக் குறை கூறி வந்த இந்தியா அதன் பிறகு இஸ்லாமிய இனத்தை நோக்கித் திரும்பியது.  இஸ்லாமியர்கள் தான் கோரொனாவை பரப்பும் படையினர் எனக் கூறத் தொடங்கியது.    சரியாகத் திட்டமிடாமல் நான்கு மணி நேரத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் நாட்டில் லட்சக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் தெருவுக்கு வந்தனர்.  ஆனால் அரசு தனது தோல்விகளை மறைக்க மார்ச் 22 அன்று அறிவித்த ஊரடங்குக்கு ஒரு வாரம் முன்பு டில்லியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டைக் குறை கூறியது.

இந்த மாநாட்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து பல இஸ்லாமியர்கள் வந்து கலந்துக் கொண்டனர்.  அவ்ர்களில் சிலருக்கு வைரஸ் தாக்கம் இருந்துள்ளது.  ஆனால் கொரோனா பாதிப்பு உள்ள தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்தோருக்கு இந்தியா எவ்வாறு விசா அளித்தது என யாரும் கேட்கவில்லை.  மலேசியாவில் இதைப் போல ஒரு மதக் கூட்டம் பிப்ரவரியில் நடந்ததால் அந்நாட்டில் வைரஸ் பெருமளவில் பரவியது.   அப்படி இருக்க இந்திய அரசு இத்தகைய மாநாடு நடத்த எப்படி அனுமதி  அளித்தது எனவும் கேள்வி எழவில்லை.

தப்லிகி ஜமாத் மாநாட்டுக்குப் பிறகு நடந்த இந்து மத கூட்டங்கள் குறித்தும் இந்திய அரசு மவுனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.  தனது நடவடிக்கைகளைச் சரிவரச் செய்து தனது தோல்வியைச் சீராக்குவதற்குப் பதில்  இந்திய அரசும் இந்து வலது சாரி ஆதரவாளர்களும்  இஸ்லாமியர்களைக் குற்றம் கூறத் தொடங்கினர்.  இது இந்தியாவுக்கு கேடு விளைவிக்க இஸ்லாமியர்கள் நடத்திய கொரோனா ஜிகாத் என்னும் அளவுக்குச் சென்றது.

இந்திய ஊடகங்கள் இஸ்லாமியரைக் குற்றம் சாட்டி வந்த வேளையில் இந்திய அரசு தப்லிகி ஜமாத் கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்களால் இந்தியாவில் சில இடங்களில் அதிக அளவில் தப்லிகி ஜமாத் மாநாட்டுக்குத் தொடர்புடையோரால் நேரடியாக கொரோனா பரவியது எனத் தெரிவிக்கத் தொடங்கியது.

உலகின் மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா கொரோனா சோதனையில் மிகவும் பின் தங்கி இருந்தது.  தப்லிகி ஜமாத் மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் மட்டுமே அதிக அளவில் சோதிக்கப்பட்டனர்.    ஒரே குழுவை மட்டும் சோதிப்பதால் நோய் உறுதி செய்யப்பட்ட அனைவருமே அந்த குழுவில் உள்ளவர்களாக மட்டுமே இருப்பார்கள்.   இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு தப்லிகி ஜமாத் அமைப்பினர் முழுக் காரணம் என்பதை அரசு கொண்டு வந்தது.  இதன் மூலம் இஸ்லாமியர்களே கொரோனா பரவுதலுக்கு கரணம் எனச் சொல்லிய அரசு அதிக அளவில் பாதிப்பு உள்ள இந்தூர் போன்ற பகுதிகளுக்கும் தப்லிகி ஜமாத் அமைப்புக்கும் தொடர்பில்லை என்பதை ஊடகங்களுக்குச் சொல்லவில்லை.

நாடெங்கும் உள்ள தப்லிகி ஜமாத் கூட்டத்துக்குத் தொடர்புடைய இஸ்லாமியர்களை காவல்துறையினரும் சுகாதார ஊழியர்களும் தேடிப்பிடித்துத் தனிமைப்படுத்தினர்   சிலர் மீது கிரிமினல் குற்றங்களும் பதியப்பட்டன.   இதனால் இஸ்லாமியர்களுக்கு அரசு மீது நம்பிக்கை குறைந்ததால் அரசு அதிகாரிகளைச் சோதனை செய்ய அனுமதிக்கவில்லை.  சில இடங்களில் அதிகாரிகள்தாக்கபட்டனர்.   இதைத் தவிர கொரோனா தனிமை முகாம்களுக்கு அந்த பகுதிகளில் வசிக்கும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   கொரோனாவால் இறந்தோர் சடலங்களை எரியூட்டவும் எதிர்ப்பு கிளம்பியது.

இஸ்லாமியர்களில் சிலர் இந்துக்கள் மீதும் சமுதாயத்தினர் மீதும் நடத்திய தாக்குதலை ஊடகங்கள் பெரிது படுத்தின.  ஆனால் அதை இந்துக்கள் நடத்தும் போது கண்டுக்கொள்ளவில்லை.  இந்திய அரசு தப்லிகி ஜமாத் கூட்டம் காரணமாக 20 கோடி இஸ்லாமியர்களைக் குற்றம் சொல்வதோடு நிறுத்தாமல் ரோகிங்கிய இஸ்லாமியர்களும் கொரோனா பரவுதலுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டி சோதனை செய்தது.

இந்த கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் இஸ்லாமியர்கள் குறிப்பாகச் சிறு வர்த்தகர்கள் மற்றும் தெரு வியாபாரிகள் மீதான தாக்குதல் அதிகரித்தது.  காஷ்மீர் இஸ்லாமியர் மீதான தாக்குடஹ்ல், மற்றும் இஸ்லாமியர்களை வலதுசாரிகள் பொருளாதார ரீதியாகப் புறக்கணிப்பது போன்றவையும் நிகழ்ந்தன. இந்து தீவிரவாதிகள் இத்தகைய தாக்குதலை நடத்தி இஸ்லாமியருக்கு மிரட்டல்கள் விடுத்தனர்.

இஸ்லாமியருக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் உலக நாடுகள் குறிப்பாக அரபு நாடுகளின் கவனத்தை இழுத்தது.    எனவே இந்திய பிரதமர் மோடி கொரோனா வைரஸ், தாக்கும் போது அது இனம், மதம், சாதி ஆகியவற்றைப் பார்க்காது எனத் தெரிவித்தார்.  ஆனால் இது மிகவும் தாமதமாக வந்துள்ளது. இந்து குழுவினர் மற்றும் அவர்களின் ஊடகங்கள் இஸ்லாமியர் மீதான எதிர்மறை விமர்சனங்கள் எதுவும் நிற்காமல் தொடர்ந்தது.

கொரோனா தாக்கம் அதிகரிக்கையில் அத்துடன் இந்தியாவில் இஸ்லாமியர் எதிர்ப்பும் அதிக்ரித்த்து.   இது ஒரு சமுதாய எதிர்ப்பாக இல்லாமல்  நன்கு திட்டமிடப்பட்ட ஒரு அரசியல் எதிர்ப்பாக அமைந்தது.  இந்திய அரசு கொரோனா தடுப்பில் பல தவறான நடவடிக்கைகள் எடுத்துள்ளது.    முதலில் இந்த வைரஸின் தாக்கத்தை வெகு தாமதமாக உணர்ந்து ஆயுர்வேத மருந்துகளைப் பரிந்துரைத்தது.   இந்திய மருத்துவர்களுக்கு ஸ்ரீயான பாதுகாப்பு கவசங்கள் இல்லை.  40 நாட்கள் ஊரடங்கைச் சரியான திட்டமிடல் இன்றி நான்கு மணி நேரத்துக்கு முன்பு அரசு அறிவித்தது.    பல வெளி மாநில ஏழைத்  தொழிலாளர்கள் உணவுக்கும் வழியின்றி தவிக்க நேர்ந்தது.

இந்திய பொருளாதாரம் ஏற்கனவே கடும் சிக்கலில் உள்ளது.  தற்போது கொரோனாவால் பல மரணங்கள் நிகழ்வதால் அது மேலும் மோசமாகி உள்ளது. இதனால் இந்தியாவின் இந்து தேசிய வாதிகள் கொரோனாவுக்கு ஒரு சமுதாய வண்ணத்தைப் பூசி தங்களின் கொள்கை ரீதியான தோல்விகளில் இருந்து தப்ப முயற்சி செய்கின்றனர்    இவை அனைத்தும் இந்தியாவில் இஸ்லாமியருக்கு எதிரான சூழலை வளர்ப்பதுடன் பீகார் போன்ற மாநிலங்களில் ஆளும் கட்சிக்கு ஆதாயம் தேடித் தரும் என நம்பப்படுகிறது.  கொரோனா வைராஸ் இந்தியாவுக்கு மிக மோசமான விளைவுகளை அளித்த போதிலும் பிரதமர் மோடிக்கு ஒரு ச்க்த் வாய்ந்த அரசியல் ஆதாயத்தை தேடித் தந்துள்ளது எனக் கூறலாம்”

என கூறப்பட்டுள்ளது.

 

Thanks : Gulf News