விதர்பா, மகாராஷ்டிரா

பிரதமர் மோடி ஒரு பிக்பாக்கெட் அடிப்பவரைப் போல் மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

வரும் 21 ஆம் தேதி மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி காங்கிரஸ், பாஜக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி அரியானாவில் ஒரு பிரசாரக் கூட்டத்தில் பாங்காக் மற்றும் வியட்நாம் எனத் தனிப்பட்ட பயணம் செல்வதாக மறைமுகமாக ராகுல் காந்தியைக் கிண்டல் செய்துள்ளார்,   நேற்று மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவில் நடந்த பிரசாரப் பேரணியில் ராகுல்காந்தி, “பிரதமர் மோடி அதானி, அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களில் ஒலிபெருக்கியாகச் செயல்பட்டு வருகிறார்.. குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்குப் பணம் கொடுக்க மக்களின் கவனத்தை ஒரு பிக் பாக்கெட் திசை திருப்பி கொள்ளை அடிப்பது போல் மோடி திசை திருப்புகிறார்.

கார்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.1.25 லட்சம் கோடி வரிச்சலுகை அளித்து விட்டு ஏழைகளுக்கு உதவும் மகாத்மா காந்தி ஊரக பணி உறுதி திட்டத்துக்கு ரூ.35000 கோடி மட்டும் கொடுக்கிறார்.   முதலில் பாரத் பெட்ரோலியம், அடுத்தது துறைமுகங்கள் அதற்கடுத்து நிலக்கரி சுரங்கங்கள் என ஒவ்வொரு பொதுச் சொத்தாக தனியாருக்குத் தாரை வார்த்து வருகிறார்.

தினந்தோறும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து பற்றிப் பேசும் பிரதமர் விவசாயிகள் பிரச்சினைகள்,  இளைஞர்கள் வேலையின்றி தவிப்பது போன்றவற்றை பேசாமல் தவிர்த்து வருகிறார்.   அத்துடன் அவரால் பதில் அளிக்க முடியாத கேள்விகளை முழுமையாகத் தவிர்த்து விடுகிறார்.

மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி இணைந்து பல சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை நசுக்கி விட்டன.    இதனால் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.  பணம் இருந்தால் மட்டுமே ஏழைகளால் பொருட்களை வாங்க முடியும்.  அதன்மூலம் உற்பத்தி  பெருகி பொருளாதாரம் வளரும்.   மோடி அரசு இதைச் செய்யத் தயாராக இல்லை” எனக் கூறி உள்ளார்.