கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் கேலோ இந்தியா என்னும் பெயரிலான இளைஞர் விளையாட்டுத் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் அஸ்ஸாம் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரதீய ஜனதா ஆட்சி நடந்துவரும் அஸ்ஸாமில், நடைபெறும் கேலோ இந்தியா என்னும் இளைஞர் விளையாட்டுத் திருவிழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் நேரமின்மை ஆகியவை காரணமாக, பிரதமரின் பயணம் ரத்தாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 10ம் தேதி இந்த விழா துவங்கவுள்ளது. மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அஸ்ஸாம் மாநிலத்திற்கான பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் திவான் துருபா ஜோதி மரால் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த விளையாட்டுத் திருவிழா குறித்துப் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “விளையாட்டு என்பதை ஒரு இயக்கம் என்று கூறியுள்ளார் பிரதமர். விளையாட்டில் தங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்த பெற்றோர்களை ஊக்குவிப்பது இந்தியாவை உருவாக்குவதற்கான முதல் படியாகும்.

இந்த கேலோ இந்திய விளையாட்டுத் திருவிழா, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுவதும் அதை நோக்கிய ஒரு நிகழ்வுதான்” என்று பேசினார் அமைச்சர்.