இந்திராகாந்தி போல மோடி துணிச்சலானவர் கிடையாது: ‘சாம்னா’ காட்டம்
மும்பை:
இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போல மோடி துணிச்சலானவர் கிடையாது என பாஜ கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.
பாரதியஜனதா ஆதரவு கட்சியான சிவசேனா அவ்வப்போது பாஜகவுக்கு எதிராக அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், மோடியை கொலை செய்ய முயற்சி செய்தாக கூறி 5 சமூக செயற்பாட்டாளர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே தனது பத்திரிகையான சாம்னாவில் மோடி மீது சரமாரியாக குற்றம் சாட்டி உள்ளார்.
பிரதமர் மோடியைக் கொல்வதற்கு மாவோயிஸ்ட்கள் திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களுக்குச் சமூக ஆர்வலர்கள் சிலர் உதவுவதாகவும் பி.வரவரா ராவ், சுதா பரத்வாத், கவுதம் நவ்லகா, அருண் பெரேரியா, வெரோன் கோன்சால்வேஸ் ஆகிய 5 சமூக ஆர்வலர்களை புனே போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர்.
இவர்களுக்கு பீமா கோரிகான் கலவரத்திலும் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது கைது செய்யப்பட்ட 5 பேரும் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா’வில் சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதன் பின்புலம் என்ன என்பதைக் கேட்டு கடுமையாக விமர்சித்துள்ளது. அதில், ”பிரதமர் மோடியைக் கொல்வதற்காக திட்டமிட்டுள்ள மாவோயிஸ்டுகளுக்கு உதவுவதாகக் கூறி, சமூக ஆர்வலர்களை புனே போலீஸார் கைது செய்தது முட்டாள்தனமானது. இப்போதுகூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை, மோடி அரசு ஜனநாயக நெறிமுறைக்குத் திரும்ப இன்னும் கால அவகாசம் இருக்கிறது, மாறவும் முடியும்.
சமூக ஆர்வலர்கள் 5 பேரைக் கைது செய்வதற்கு புனே போலீஸார் கூறிய காரணம் முட்டாள் தனமானது.
இன்றைய சூழலில் அரசாங்கமும், அரசியல்வாதிகளும் பல்வேறு நோக்கங்களுக்காக போலீஸாரைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. ஆனால், உண்மையில் வேகாக வெளியே எழும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.
பிரதமர் மோடியைக் கொல்வதற்காக மாவோயிஸ்ட்கள் திட்டமிட்டுள்ளார்கள், அதிலும், ராஜீவ் காந்தியைக் கொன்றது போன்று கொல்லத் திட்மிட்டுள்ளார்கள் என்று புனே போலீஸார் கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் துணிச்சல் மிக்க தலைவர்கள், அச்சத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள். ஆனால், பிரதமர் மோடி அதுபோன்று ஒருபோதும் துணிச்சலாகவும், வீரதீரமாகவும் செயல்பட்டது இல்லை. பிரதமர் மோடிக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பு உலகத் தரமானது, அவரின் தலைக்கு மேல் ஒரு பறவைகூட பறக்கமுடியாது.
மாவோயிஸ்ட்கள் கைகளில் அதிகமான அரசியல் பலம் இருக்கிறது என்று பாஜகவின் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால், கம்யூனிஸ்ட்கள் மேற்கு வங்காளத்திலும், திரிபுராவிலும், மணிப்பூரிலும் ஆட்சியை எப்படி பறி கொடுத்திருக்க முடியும்.
போலீஸார் கைது செய்துள்ள பி.வரவரா ராவ், சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, அருண் பெரேரியா, வெரோன் கோன்சால்வேஸ் ஆகியோர் பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்றவர்கள், மனித உரிமைக்காகப் பல களங்களில் இறங்கிப் போராடுபவர்கள்.
இவர்களைக் கைது செய்ததில் ஏதோ சில இடங்களில் தவறு நடந்திருக்கிறது. புதிய நகைச்சுவையான காரணங்களை பாஜக அரசு சொல்வதற்கு முன் உண்மை வெளிப்படும் என்று நம்புகிறோம்”.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.