கோவா சுரங்க பிரச்னைக்கு தீர்வு காணாத மோடி : சிவசேனா தாக்கு

டில்லி

பிரதமர் மோடி நினைத்தால் ஐந்தே நிமிடத்தில் கோவா சுரங்க பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்றாலும் அவர் முயலவில்லை என சிவசேனா பாராளுமன்ற உறுபினர் சஞ்சய் ரவுத் கூறி உள்ளார்.

உச்சநீதிமன்றம் கோவாவில் செயல்பட்டு வந்த 88 இரும்புத் தாது சுரங்க குத்தகை ஒப்பந்தம் புதுப்பித்ததை ரத்து செய்தது. இதனால் அங்கு கடந்த மார்ச் முதல் இரும்பு சுரங்கங்கள் மூடப்பட்டன. சுரங்கப் பணியாளர்கள் ஏராளமானோர் பணி இழந்தனர். அது மட்டுமின்றி மாநிலத்துக்கு வருவாய் ஈட்டும் இரு தொழில்களில் ஒன்றான சுரங்கத் தொழில் முடங்கியதால் மாநிலத்தின் வருவாய் வெகுவாக குறைந்துள்ளது.

சுரங்கப் பணியாளர்கள் ஒன்றிணைந்து கோவா சுரங்க மக்கள் முன்னணி என்னும் அமைப்பை உருவாக்கி உள்ளனர். அந்த அமைப்பின் சார்பில் நேற்று டில்லியில் போராடம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது தற்போது நடைபெறும் நாடாளுமன்ற குளிர்காலத் தொடரில் சுரங்க சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சுரங்க பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், “நாங்கள் ஆங்கிலேய ஆட்சியையும் நீங்கள் போர்த்துகீசிய ஆட்சியையும் பார்த்துள்ளோம். அந்த வெளிநாட்டினர் கூட நமது மக்களின் வாழ்வாதாரத்துக்கு எதிராக செயல்பட்டதிலை. ஆனால் தற்போதைய மோடி அரசு அவ்வாறு இல்லை.

கோவா சுரங்கத்துக்கு வெறும் 5 நிமிடங்களில் பிரதமர் மோடி நினைத்தால் தீர்வு காண முடியும். ஆனால் அவர் அதில் அக்கறை காட்டவில்லை. இந்த சுரங்க தொழிலாளர்கவ்ல் விவகாரத்துக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். மத்தியிலும் கோவா மாநிலத்திலும் பாஜக ஆட்சி உள்ளதால் இந்த கோவா சுரங்க விவகாரத்தில் அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்” என கூறி உள்ளார்.

You may have missed