பெங்களூரு

பிரதமர் மோடிக்கு அரசியல்மைப்பு என்னவென்று புரியவில்லை என கர்னாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி வடோதரா நகரில் ஒரு பேரணியில் கலந்துக் கொண்டு பேசி உள்ளார்.  அங்கு அவர் பேசும் போது தனது அரசு மக்களின் வரிப்பணத்தை தேவையற்ற திட்டங்களுக்கு செலவழிக்காது எனத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பேரணியில் மோடி, “மத்திய அரசு மக்களின் வரிப்பணத்தை தேவையற்ற திட்டங்களுக்கு செலவழிக்காது.  முன்னேற்ற திட்டங்களுக்கு மட்டுமே நிதி உதவி மாநிலங்களுக்கு அளிக்கப்படும்.  கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்த மாநிலத்துக்கு எந்த உதவியும் செய்யவில்லை.  ஆனால் இந்த அரசு அப்படி இல்லை.  அதே நேரத்தில் கேட்கப்படும் எல்லா உதவியும் எல்லா மாநிலங்களுக்கும் இந்த அரசு அளிக்காது” என தெரிவித்திருந்தார்.

கடந்த ஜூன் மாதம் கர்னாடகா அரசு விவசாயக் கடன் ரூ. 8165 கோடியை தள்ளுபடி செய்தது.   அத்துடன் ரூ. 42000 கோடி வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொண்டது.  ஆனால் மத்திய அரசு கர்னாடக அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டது.

இந்நிலையில் கர்னாடக முதல்வர் சித்தராமையா தனது டிவிட்டர் பக்கத்தில், “மோடி இன்னும் அரசியல் அமைப்பு என்னவென்று தெரிந்துக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.   மத்திய அரசு மாநில அரசுக்கு அளிப்பது தானமோ தர்மமோ இல்லை.  அது மாநில அரசின் உரிமை” என பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.