அரசுப் பணத்தை ஓட்டு வாங்க லஞ்சமாக அளிக்கும் மோடி : சிதம்பரம் தாக்கு

சென்னை

வாக்கு வாங்குவதற்காக அரசுப் பணத்தை லஞ்சமாக வழங்கும் திட்டத்தை மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார் என ப சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.

மத்திய அரசு தாக்கல் செய்த இடைநிலை நிதி அறிக்கையில் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்று ரூ.6000 உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிவிவிக்கப்பட்டது.  இந்த நிதி உதவித் திட்டம் இந்த ஆண்டிலேயே தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.  அத்துடன் அதற்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.75000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு வழங்கும் இந்த ரூ.6000 உதவித் தொகை மூன்று தவணைகளாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடி விவசாயிகள் தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர். இன்னும் ஒன்று அல்லது இரண்டு தினங்களில் மேலும் 1 கோடி விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இன்று பிரதமர் மோடி முதல் தவணையாக ரூ.2000 வழங்குவதை தொடங்கி வைத்துள்ளார்..

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில், “இந்த நாள் ஜனநாயகத்துக்கு ஒரு கறுப்பு நாள். ஒரு விவசாயக் குடும்பத்தில் இருப்பது 5 பேர், ஆனால் அளிக்கப்படும் உதவித் தொகை தினம் ரூ. 17. இதற்கு பெயர் உதவித் தொகையா, பிச்சையா அல்லது லஞ்சமா? ஓட்டுக்குத் தரப்படும் லஞ்சம் தானே இது?

ஐந்து வருடமாக விவசாயத்தை அழித்த மோடி அரசு இன்று ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் ரூ. 2000 அளிக்கின்றனர். வாக்கு அளிக்க அரசுப் பணத்தை லஞ்சமாக அளிக்கும் திட்டத்தை இன்று பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்” என மோடியை கடுமையாக தாக்கி பதிவிட்டுள்ளார்.

You may have missed