“வெயிட் தூக்குவதில் மோடி பலசாலி!”: ரஜினி கருத்திற்கு வைகோ கிண்டல்

“நன்றாக வெயிட் தூக்குபவர் என்ற அர்த்தத்தில் மோடியை பலசாலி என ரஜினி கூறியிருப்பார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டலாக தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ஏழு பேர் விடுதலை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “எந்த 7 பேர் ?  என்று ரஜினி கேட்டார்.

பிறகு, ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் என்று விளக்கிய செய்தியாளர்கள், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் மத்திய உள்துறையே நிராகரித்து அனுப்பிய விவகாரம் பற்றி கேட்டார்கள். அதற்கு ரஜினி, “நான் இப்பத்தான் வந்திருக்கேன்.. எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.

அதேபோல், பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பலர் ஒன்று சேர்கின்றனர். அந்தளவு அது ஆபத்தான கட்சியா?  என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு   ‘அது ஆபத்து என அவர்கள் நினைக்கிறார்கள். அப்படியென்றால் அது ஆபத்துதானே!’ என பதிலளித்தார்.

எழுவர் குறித்து அவர் அளித்த பதிலுக்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதே போல, பாஜக குறித்த அவரது பதிலுக்கு தமிழிசிசை, “கேள்வியை ரஜினி சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. மீண்டும் கேட்டால் தெளிவாக பதில் அளிப்பார்” என்றார்.

இதையடுத்து நேற்று செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்து தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு வெளியே சந்தித்தார் ரஜினி.

அப்போது, தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார்

“பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை பற்றி   தெரியாத அளவிற்கு நான் முட்டாள் அல்ல. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் பற்றி எனக்கு தெரியாது என்ற மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர். கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் பதில அளித்திருப்பேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் விடுதலை என்று கேட்டிருந்தால் புரிந்திருக்கும். வெறும் 7 பேர் விடுதலை என்று கேட்டதால் எனக்கு புரியவில்லை” என்றார். மேலும், “அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

அடுத்து, “பாஜக ஆபத்தான கட்சி என்று நான் பதில் சொன்னதாக ஊடகங்களில் செய்தி வெளியாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி என்றே சொன்னேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய ரஜினி, “பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்கிறார்கள். பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என்று நீங்கள் சொல்லுங்கள்? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “நல்லா வெயிட் தூக்குபவர் என்ற அர்த்தத்தில் மோடி பலசாலி என ரஜினி கூறியிருப்பார்” என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.