மோடி தேநீர் விற்றதாக சொன்னது அரசியல் ஆதாயத்துக்காக : பிரவின் தொகாடியா

டில்லி

மோடி தேநீர் விற்கவில்லை எனவும் அரசியல் ஆதாயத்துக்காக அப்படி சொல்லிக் கொள்வதாகவும் முன்னாள் வி இ ப தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.

இந்து அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச செயல் தலைவராக பதவி வகித்தவர் பிரவீன் தோகாடியா. இவர் மோடிக்கு கடந்த 43 வருடங்களாக நெருங்கிய நண்பராக உள்ளவர். இவர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் இருந்து விலகி தற்போது அந்தரஷ்டிரிய இந்து பரிஷத் என்னும் அமைப்பை தொடங்கினார். அத்துடன் வரும் 2019 ஆம் வருட மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார்.

பிரவீன் தொகாடியா, “அயொத்தியில் ராமர் கோவில் அமைப்பதில் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்புக்களுக்கு சிறிதும் அக்கறை இல்லை. சமீபத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர் பையாஜி ஜோஷி வரும் 2025ல் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் என சொன்னதில் இருந்தே இன்னும் 5 வருடங்களுக்கு கட்டுமானம் தொடங்கப்படாது என்பது தெளிவாகி உள்ளது. இந்த இரு அமைப்புக்களும் சேர்ந்து 125 கோடி இந்தியர்களை இருளில் ஆழ்த்தியது.

தற்போது மக்கள் விழித்துக் கொண்டுள்ளனர். வரும் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி நான் இந்து மக்களுக்காக ஒரு புதிய கட்சி தொடங்க உள்ளேன். அந்தகட்சி ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே கோவில் கட்டுமான பணி தொடங்கப்படும். நள்ளிரவில் முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றிய மோடியால் கோவில் அமைக்க சட்டம் இயற்ற முடியவில்லை. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் ராமர் கோவில் கட்ட மட்டார். அதை வைத்தே மீண்டும் வாக்குகளை கவர அவர் திட்டமிட்டுள்ளார்.

அவர் அரசியல் ஆதாயத்துக்காக இவ்வாறு செய்கிறார். நான் அவருடன் 43 வருடங்களாக நெருங்கிய நட்பில் இருந்துள்ளேன். அவர் தேநீர் விற்றதை நான் பார்த்ததில்லை.   அது அவர் மேல் இரக்கம் உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேட அவர் சொல்லிக் கொள்வது ஆகும். ராமர் கோவில் கட்டுமானம் முடிந்து விட்டால் அதன் பிறகு அவருக்கு அரசியல் செய்ய எதுவும் காரணம் இருக்காது. அத்துடன் ஆர் எஸ் எஸ் இயக்கமும் உடைந்து விடும். ஆகவே அவர்களிடம் ராமர் கோவில் கட்டும் திட்டத்தை எதிர்பார்க்க முடியாது” என தெரிவித்துள்ளார்.