சென்னை:

மிழகம் வருகை தந்துள்ள சீனா அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இன்று 2வது  நாளாக சென்னை அருகே கோவளத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்தியா- சீனா சரித்திரத்தில் புதிய திருப்பமாக இரு தலைவர்களும் முறைசாரா மாநாடுகள் மூலம் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். இதன் ஒரு கட்டமாக மாமல்லபுரத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது,  இருநாட்டு தலைவர்களும் அங்குள்ள புராதான சிற்பங்களை ரசித்தபடி பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் கடற்கரை கோவிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள ஹோட்டலில் தங்கினார். சீன அதிபர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.

இன்று இரு தலைவர்களும் கோவளம் ஹோட்டலில் சந்தித்து பேசுகின்றனர். அப்போது இருநாட்டு உயர்நிலைக் குழுவினரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசுகின்றனர்.

முன்னதாக இன்று காலை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து ஜின்பிங் கோவளம் ஓட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.  அங்கு ஜின்பிங் – மோடி தனியாக சுமார் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்

அதுபோல, இந்திய – சீன குழுவும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதைத்தொடர்ந்து,  ஜின்பிங் மற்றும் சீன குழுவுக்கு அரசு சார்பில்  மதிய விருந்து அளிக்கப்படுகிறது.

மதிய விருந்தை தொடர்ந்து  சீன அதிபர் ஜின்பிங் நேபாளம் புறப்படுகிறார்  பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார்.

இதையடுத்து  மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.