சென்னை:

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபியும் திரிபாதி உள்பட உயர் அதிகாரிகள்  மாமல்லபுரத்தில் நேரில் ஆய்வு  செய்தனர்.

அடுத்த மாதம் (அக்டோபர் மாதம்) பாரம்பரியம் மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதும், வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்களை கொண்டுள்ள மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்தித்து பேசும் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இதில் சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த உள்ளார். அத்துடன் ,  கிழக்கு கடற்கரையோர எழில் நகரான மாமல்லபுரத்தின் புராதன சிற்பங்களையும் சின்னங்களையும் பார்வையிடுகின்றனர். இதன் காரணமாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட சீன நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளும் மாமல்லபுரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

அங்கு பிளாட்பார கடைகள் அகற்றப்பட்டும், குப்பை கூளங்கள் அகற்றப்பட்டு, இடங்கள் சுத்தம் செய்யப்பட்டும் வருகின்றன.  லாட்ஜ்கள் மற்றும் ரிசாட்டுகளில் தங்கி  உள்ளவர்கள் மற்றும் வெளிநாட்டினர் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு  வருகின்றன இதற்கான ஏற்பாடுகளை, மத்திய-மாநில அரசுகளின் உயரதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகமும், டிஜிபி திரிபாதியும் இன்று காலை மாமல்லபுரம் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தமிழக உளவுத்துறை அதிகாரிகள், டிஐஜி தேன்மொழி, மாவட்ட ஆட்சியர் பொன்னையா, எஸ்.பி. கண்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகளும் உடன் சென்றனர்.

மோடி, ஜின்பிங் பார்வையிட உள்ள இடங்களான  அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.