புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வாரில் தலித் பெண்மணி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ள மோடி, அம்மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெற தயாரா? என சவால் விடுத்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த மாயாவதி, “பிரதமர் நரேந்திர மோடி மட்டமான அரசியல் செய்வதாகவும், கடந்த காலங்களில் தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

அதேசமயம், ராஜஸ்தானில் நடந்த அந்த கூட்டு வன்புணர்வு சம்பவத்திற்காக, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை, மாயாவதி மற்றும் மோடி இருவரும் தனித்தனியே விமர்சித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆல்வார் பகுதியில் தேர்தல் நடந்து முடியும்வரை, அந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி மெளனம் சாதித்ததாக குற்றம் சாட்டுகிறார்கள் அவர்கள். இந்தக் கூட்டு வன்புணர்வு சம்பவத்தையடுத்து, மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

ஏப்ரல் 26ம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்து, அதே மாதம் 30ம் தேதி புகாரளிக்கப்பட்டது. ஆனால், மே மாதம் 7ம் தேதிதான் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.